(இரோஷா வேலு) 

பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற போர்வையில்  சட்டவிரோதமாக போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த 60 இளைஞர், யுவதிகளை விசாரணைக்குட்படுத்தி, அவர்களுள் போதைப்பொருள் வைத்திருந்த ஆறு பேரை கைது செய்துள்ளதாக வெயாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வெயங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெயங்கொடை நகர பகுதியிலுள்ள விடுதியொன்றில் நேற்று பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகளிடமே பொலிஸார் மேற்படி விசாரணையை நடத்தினர்.

இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்ட அறுபது பேரில் 8 பேர் யுவதிகள் எனவும் 52 பேர் இளைஞர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபான போத்தல்கள் என்பன மீட்க்கப்பட்டுள்ளதாகவும் போதைப் பொருள் வைத்திருந்த ஒரு யுவதி உட்பட ஆறுபேரை  கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐவரையும் அத்தனகல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.