எச்.எம்.டி குளோபல் நிறுவனம் புதிய நொக்கியா ஸ்மார்ட்போனினை நாளை 29 ஆம் திகதி வெளியிடவுள்ளதை புதிய டீசர்களின் மூலம் தெரிவித்துள்ளது.

 புதிய டீசருடன் #ChargedUp என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் அதிக பட்டரி பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் புதிய சாதனம் நொக்கியா X6 சர்வதேச மொடலாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நொக்கியா X6 ஸ்மார்ட்போனில் க்விக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருந்தது. இது ஸ்மார்ட்போனினை 0-50% சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே எடுத்துக் கொள்கிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களில் நொக்கியா 2, நொக்கியா 3 மற்றும் நொக்கியா 5 ஸ்மார்ட்போன்களை எச்.எம்.டி குளோபல் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நொக்கியா மொபைல் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் மே 29 ஆம்  திகதி மொஸ்கோவில் நடைபெற இருக்கும் விழாவில் புதிய நொக்கியா சாதனம் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வு மொஸ்கோ நேரப்படி இரவு 7.40 மணி ( இலங்கை நேரப்படி இரவு 10.10 மணி) ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி மே 29 ஆம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் நொக்கியா X6 ஸ்மார்ட்போனின் சர்வேதச மொடல் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக எச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் சர்விகாஸ் நொக்கியா X6 சர்வதேச மொடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கேட்டிருந்தார்.

நோக்கியா X6 சிறப்பம்சங்கள்

5.8 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்

அட்ரினோ 509 GPU

4 ஜிபி / 6 ஜிபி ரேம்

32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

அன்ட்ரொய்ட் 8.1 ஓரியோ, அன்ட்ரொய்ட் பி அப்டேட்

16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல்

5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்

16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்

கைரேகை சென்சர்

4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத்

3060 எம்ஏஹெச் பேட்டரி

குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

நொக்கியா X6 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் நொக்கியா X6 (4 ஜிபி ரேம்+ 32 ஜிபி மெமரி) விலை 1299 யுவான் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நொக்கியா X6 (4 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி) விலை 1499 யுவான் என்றும், நொக்கியா X6 (6 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி) விலை 1699 யுவான் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை இரண்டு முறை ஃபிளாஷ் விற்பனை செய்யப்பட்டு இருக்கும் நொக்கியா X6 நொடிகளில் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சீன சந்தையில் புதிய நொக்கியா X6 ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது.

நொக்கியா X6 சர்வதேச மொடல் மட்டுமின்றி நொக்கியா 2, நொக்கியா 3 மற்றும் நொக்கியா 5 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களும் மே 29 ஆம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டூயல் கேமரா செட்டப் கொண்ட நொக்கியா 3.1 ஸ்மார்ட்போனும் இதே விழாவில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.