(எம்.எம்.மின்ஹாஜ்)

தேர்தல் காலங்களின்போது அர்ஜூன அலோசியஸ் 1.3 பில்லின் ரூபாவை அரசியல்வாதிகளுக்கே செலவிட்டுள்ளார். அவரிடமிருந்து பணம் பெற்றவர்களின் பெயர் விபரங்கள் ஜனாதிபதியிடம் உள்ளது.

எனவே தகவல் அறியும் சட்டத்தினூடாக இவ்வாறு பணம் பெற்றவர்கள் அனைவரினதும் பெயர்களை வெளியிடுமாறு கோரி ஜனாதிபதி செயலாளருக்கு உத்தியோகபூர்வ கடிதமொன்றை கையளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியின் ரணில் எதிர்ப்பு குழுவின் ஊடகவியலாளர் மாநாடு  புஞ்சி பொரளையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் காலத்தின்போது அர்ஜூன அலோசியஸிடமிருந்து அவருக்கு சொந்தமான 16 நிறுவனங்களின் ஒன்றினூடாகவே நான் அவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பணத் தொகையை  காசோலையாக  பெற்றேன். 

மத்திய வங்கி மோசடியுடன் சம்பந்தப்பட்ட பெப்பர்ச்சுவல் டிசரிஸ் நிறுவத்தினூடாக நான் இதனை பெறவில்லை. ஆகவே அதில் தவறு ஏதுமில்லை.

அர்ஜூன அலோசியஸ் தேர்தல் காலங்களின் போது 1.3 பில்லியன் ரூபாவை அரசியல்வாதிகளுக்காக செலவிட்டுள்ளார். அவரிடம் இருந்து 118 பேர் பணம் பெற்றுள்ளனர். இவர்களின் பெயர்கள் ஜனாதிபதியிடம் உள்ளது. 

இதன்படி தகவலறியும் சட்டத்தினூடாக இவ்வாறு பணம் பெற்ற அத்தனை பேரின் பெயர்களை வெளியிடுமாறு கோரி ஜனாதிபதி செயலாளருக்கு அடுத்த வாரம் உத்தியோகபூர்வ கடிதமொன்றை கையளிக்க நாம் திட்டமிட்டுள்ளோம் என்றார்.