கோடைக்காலத்தின் போது மக்கள் அனைவரும் அதிகமாக தண்ணீரை அருந்தவேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது பொதுவான அறிவுரை தான். ஏனெனில் ஒரு சிலருக்கு அவர்களின் உடலுக்கு தேவையான அளவை விட அதிகளவிற்கு தண்ணீர் குடித்தால் அவர்களுக்கு ஹைப்போநட்ரீமியா பாதிப்பு ஏற்படலாம்.

அதிகளவிற்கு தண்ணீர் அருந்தும் போது உடலுக்கு தேவையான சோடியம் சத்தின் அளவில் மாற்றம் ஏற்படுகிறது. அத்துடன் எம்முடைய உடலில் இருக்கும் க்ளையல் செல்களில் நீரேற்றத்தினை உணரும் நியுரான்களின் செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. 

இதன் காரணமாக உடலின் நீர்ச்சத்து அளவில் மாறுபாடு ஏற்படுகிறது. அதாவது உடலுக்கு தேவையான அளவைக்காட்டிலும் அதிகளவிலான நீர் இருக்கும். இதனால் உடலிலுள்ள சோடியம், இரத்தத்திற்கு ஏதுவான சத்தாக மாறாமல் தேக்கமடைந்து வீக்கமாகவோ அல்லது கட்டியாகவோ மாற்றம் கொள்கிறது. செல்களும் பலவீனமடைகிறது. இதனால் ஆரோக்கிய கேடு விளைகிறது.

ஒருவர் வெளியேற்றும் சிறுநீரின் நிறத்தை வைத்தே அவர்களின் உடலில் அதிகளவு நீர் சத்து இருக்கிறதா? அல்லது போதிய அளவிற்கு நீர்ச்சத்து இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளலாம். வெளிர் மஞ்சள் வண்ணத்தில் சிறுநீர் பிரிந்தால், அவர்கள் ஆரோக்கியமான நீர்சத்தினை கொண்டவர்கள் என்று கண்டறியலாம். 

அதேபோல் அதிகளவிற்கு தண்ணீர் அருந்தினால் உடலிலுள்ள இரும்புச்சத்தினையும் அது பாதிக்கும். ஒருவரின் உடலில் அதிகளவிற்கு நீர்ச்சத்து இருக்குமேயானால் அவர்களுக்கு குமட்டல், வாந்தி, தலைவலி, சுயநினைவிழத்தல், தசைகள் வலுவிழத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். 

இவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து தங்களின் எடை, உயரம் போன்றவற்றிற்கு ஏற்ப  எவ்வளவு தண்ணீரை அருந்தலாம்? அதை எப்படி அருந்தலாம்? என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டு அதனை பின்பற்றவேண்டும். அதே சமயத்தில் உங்களுக்கு ஏற்படும் தாகமே தண்ணீர் தேவையை உணர்த்தும் சிறந்த அறிகுறியாக கொள்ளவேண்டும். தாகம் தீரும் வரை மட்டுமே தண்ணீர் அருந்துவதும் நல்லவிடயம். 

இதைதவிர்த்து கோடை காலம் நல்ல தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது என்று சுயவிருப்பத்தின் பேரில் உங்களின் உடலுக்கு ஏற்ற அளவைக்காட்டிலும் அதிகளவிலான தண்ணீரை அருந்தினால் இதனால் கல்லீரல். சிறுநீரகம், இதயம் போன்றவை பாதிக்கப்படலாம். அத்துடன் ஹோர்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டிலும் இனம்கண்டறிய இயலாத அளவிற்கு மாற்றம் ஏற்படலாம்.

ஒரு சிலர் கோடைக்காலத்திலும் மரதன் போன்ற நீண்ட தூர போட்டிகளில் பங்குபற்றுவார்கள். அவர்கள் முறையாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தேவையான நீரின் அளவை தெரிந்து கொண்டு அதனை அருந்தி உடல் நலத்தை காத்திடவேண்டும்.

டொக்டர் சிவக்குமார்

தொகுப்பு அனுஷா