ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் கலவரம் ஏற்பட்டிருக்காது என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் திருவாரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘தமிழகத்திற்கு பிரதமர் மோடி முதல்வராக கிடைத்திருப்பது பெருமை. மோடியின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பிளவு படுத்தப்பட்டு போராட்டங்களுக்கு தூண்டி விடும் அரசாக உள்ளது. 

குறிப்பாக சிறுபான்மையின மக்கள் தாங்கள் இந்தியர் என்ற உணர்வில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தலித் மக்கள் அதிகமான  தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர். இது மட்டுமின்றி பொருளாதாரத்தில் பின்தங்கியும், தொழில்கள் நசுக்கப்பட்டும் விட்டது.  தூத்துக்குடி  கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்வரோ அல்லது அமைச்சர்களோ ஏன் பார்க்க செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு 144 தடை உத்தரவு உள்ளதால் செல்லவில்லை என்று முதல்வர் கூறுகிறார். 

ஒருவர் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ பதவியேற்கும் போது அவர்களின் உரிமைகள் என்ன என்பது குறித்து பயிற்சி அளிப்பார்கள். அந்த பயிற்சிகளுக்கு முதல்வர் செல்லவில்லை என்பதை தான் அவரது பேச்சு காட்டுகிறது. 

மேலும் தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் சமூக விரோதிகள் என்றும் கூறுகின்றனர். நாங்களும் அதை தான் கூறுகின்றோம்.  தமிழகத்தில் சமூக விரோதிகளாக  உள்ளவர்கள் ஆட்சி நடத்துவதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடும் விவகாரத்தில் நீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்கக் கூட தமிழக அரசு முன்வரவில்லை. பொதுமக்கள் தொடர்ந்து நூறு நாட்கள் வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களிடம் அமைச்சர்களோ, அதிகாரிகளோ, அல்லது முதல் அமைச்சரோ பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் இது போன்று மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டிருக்காது.’ என்றார்.

முன்னதாக தன்னுடைய தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்ட பாலம் ஒன்றை அவர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இரண்டு துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டதாகவும்,, வன்முறை ஏற்பட்ட நிலையில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்படுவதை  தவிர்க்கவே துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிடப்பட்டதாகவும் பொலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.