(ஆர்.யசி)

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதியுடனோ அல்லது பிரதமருடனோ கலந்துரையாடி காலத்தை கடத்துவதற்கு நாம் தயாரில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக தெரிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

20 ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாட முடியும். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது  குறித்து பிரதமருடனோ அல்லது ஜனாதிபதியுடனோ கலந்துரையாட வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இருவருமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக கூறியே ஆட்சிக்கு வந்தனர்.

ஆகவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதா? இல்லையா? என்பது குறித்து இவர்களுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை.  அதேபோல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை கடத்தவும் நாம் தயாராகவும் இல்லை. மேலும் காலத்தை கடத்தி தமது தேவைகளை பூர்த்தி செய்யும் சதிகளுக்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. 

எனினும் அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்து சகல தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஆரோக்கியமான மாற்றங்களை மேற்கொள்ள நாம் தயார் என்றார்.