கிரிக்கெட்டில் வயது என்பது ஒரு பிரச்சினை கிடையாது. உடல் தகுதியுடன் இருப்பது தான் முக்கியமென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.

இடம்பெற்று முடிந்த 11 ஆவது ஐ.பி.எல். தொடரில் இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30 வயதை தாண்டிய 8 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர்.

இதில் அணித்தலைவர் டோனி (36 வயது), இம்ரான் தாகீர் (39), ஹர்பஜன்சிங் (38), வொட்சன் (36), பிராவோ (34), டூபிளசிஸ் (33), அம்பதிராயுடு (32), ரெய்னா (31) உள்ளிட்ட வீரர்கள் 30 வயதை தாண்டி இருந்தனர். 

இதனால் ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை “அப்பாக்கள் அணி” என பலர் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 11 ஆவது ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றி விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பில் டோனி கருத்துத் தெரிவிக்கையில், 

எமது அணி வீரர்களின் வயது பற்றி அதிகமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் வயது ஒரு பிரச்சினை கிடையாது. உடல் தகுதியுடன் இருப்பது தான் முக்கியம்.

நாம் உதாரணத்திற்கு அம்பதி ராயுடுவை எடுத்துக்கொண்டால் 32 வயதான அவர் நல்ல உடல் தகுதியுடன் இருந்து அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி உள்ளார். எனவே வயதைவிட உடல் தகுதி தான் முக்கியம் என டோனி தெரிவித்துள்ளார்.