நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் தொழிற்சாலை பிரிவில், இன்று காலை 7.55 மணியளவில் இப்பிரதேசத்தில் வீசிய கடும் காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்து ஆலயம் ஒன்று  சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையினை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சில பிரதேசங்களில் கடும் காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் காரணமாகவே மரம் முறிந்து வீழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மரம் அம்மன் ஆலயம் மீது முறிந்து வீழ்ந்ததினால் ஆலயத்தின் கூரைக்கும், சுவர்களுக்கும், விக்கிரகங்களுக்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் இடம்பெறும் போது கோயிலில் எவரும் இருக்கவில்லை என்றும் இதனால் ஏற்படவிருந்த உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.