(இரோஷா வேலு) 

முதுன்பிட்டகந்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பாகியதால், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இராணுவ வீரரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிரிந்திவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதுன்பிட்டகந்த பிரதேசத்தில்  இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாகமாறியுள்ளது . இதன் போதே குறித்த இராணுவ வீரர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார். 

 முதுன்பிட்டிகந்த - ரதாவான பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இராணுவ வீரரான எட்டியாராச்சிலாகே அமித் பிரியங்கர என்பவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்குண்டு  சம்பவத்தில் பலியானார் . 

கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் காயங்களுக்குள்ளானவரை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வத்துபிட்டிவல வைத்தியசாலையில் குறித்த இராணுவ வீரரின் சடலம் வைக்கப்பட்டுள்ளதோடு, நேற்றைய தினம் பிரேத பரிசேதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

மேலும் இச்சம்பவத்தின் போது கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்யும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிரிந்திவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.