இரண்டு ஆண்டு தடைகளின் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் சன்ரைஸர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று மூன்றாவது முறையாகவும் ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியது.

அந்த வகையில் 11 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் மோதின.

இதன்படி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் தலைவர் தோனி சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

சன்ரைஸர்ஸ் அணி சார்பாக கோஸ்வாமி ஐந்து ஓட்டங்களை பெற்று ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார், தவான் 26 ஓட்டங்களை பெற்ற வேளை ஜடேஜாவின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.

அணியின் தலைவர் வில்லியம்ஸன் 47 ஓட்டங்கள‍ை பெற்று ஆட்டமிழந்தார். சாகிப் 23 ஓட்டங்களையும் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய யூசுப் பத்தான் 25 பந்துகளில் 45 ஓட்டங்களையும் பிரத்வைட் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

179 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான வொட்சன், டூப்பிளஸ்ஸி ஆகியோர் தடுமாற்றத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

இந் நிலையில் டூப்பிளஸ்ஸி 10 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை சன்டீப் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பிறகு ரய்னாவுடன் கைகோர்த்த வொட்சன் ஹைதராபாத் அணியின் பந்துகளை பறக்கவிட்டு வான வேடிக்கை காட்டி 57 பந்துகளில் 117 ஓட்டங்களை பெற்றார்.

இறுதியில் 18.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து எட்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று மூன்றாவது முறையாகவும் ஐ.பி.எல்.கிண்ணத்தை கைப்பற்றியது.