காங்கோ நாட்டில் படகொன்று கவிழ்ந்து வீழ்ந்ததில் அதில் பயணித்த 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை மொம்போயோ ஆற்றினூடாக மொன்கோட்டோ நகரிலிருந்து எம்பன்டாக நகரை நோக்கி பொருட்கள் மற்றும் பயணிகளுடன் சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது நடந்த மீட்புப் பணிகளில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தவர்களுள் 49 சடலங்களையும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஒரு சடலத்தையும் மீட்டுள்ளனர். 

இச் சம்பவம் குறித்து அந் நாட்டின் தசிவாபா மாகாண துணை ஆளுநர் தெரிவிக்கையில்,

இப் படகு விபத்தானது எவ்வாறு நிகழ்ந்தது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. அத்துடன் இப் படகில் பயணித்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்தும் தகவல் கிடைக்கவில்லை.

எனினும் அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இரவில் படகுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இவர்கள் இதனை மீறி படகுப் பயணத்தில் ஈடுபட்டமை சட்டவிரோத குற்றமாகும் என்றார்.