(லியோ நிரோஷ தர்ஷன்)

நாட்டில் தென்மேல் பருவபெயர்ச்சியின் அவல நிலை இன்றுடன் ஏழாவது நாளகவும் தொடர்கின்றது. நாடளாவிய  ரீதியில் 20 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து  53 ஆயிரத்து 712  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 21 பேர் பலியாகியுள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது . 

வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக 105 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 4,708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதனால் 14,437 குடும்பங்களைச் சேர்ந்த 55, 553 பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு அவர்கள் 265 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை தொடர்வதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அமலநாதன் குறிப்பிட்டார். 

புத்தளம், கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் குருணாகல் மாவட்டங்கள் அதிக பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளன. புத்தளம் மாவட்டத்தில் 10,001 குடும்பங்களைச் சேர்ந்த 35,951 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 8997 குடும்பங்களைச் சேர்ந்த 36, 598 பேரும்,  இரத்தினபுரி மாவட்டத்தில் 8578 குடும்பங்களைச் சேர்ந்த 33, 358 பேரும்,  கொழும்பில் 4,779 குடும்பங்களைச் சேர்ந்த 18,885  பேரும்,  குருணாகல் மாவட்டத்தில் 3,085 குடும்பங்களைச் சேர்ந்த 11,107 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,580 குடும்பங்களைச் சேர்ந்த 6,147 பேரும்,  கேகாலை மாவட்டத்தில் 1,514 குடும்பங்களைச் சேர்ந்த 5,686 பேரும்,  காலி மாவட்டத்தில் 489 குடும்பங்களைச் சேர்ந்த 1908 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதே வேளை கண்டி, நுவரெலியா, பதுளை, முல்லைத்தீவு, மொனராகலை, மாத்தறை, மாத்தளை, வவுனியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை 

மலைப்பாங்கான பிரதேசங்களில் மண் ஈரப்பதன் காரணமாக மண் சரிவு அபாயம் அதிகம் காணப்படுகின்றது.  மண்சவுகள் அதிகம் பதிவாகியுள்ள இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை , காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. 

மழை வீழ்ச்சி

நூறு மில்லி மீற்றரை அண்மித்த மழை வீழ்ச்சி சில பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. அதன்படி அதி கூடிய மழை வீழ்ச்சியாக கம்பஹா மாவட்டத்தில் 78 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது. இதே வேளை யட்டியாந்தோட்டையில் 75.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் , குருணாகல், மஸ்கெலியா, குளியாபிட்டிய, பிபிலி ஆகிய பிரதேசங்களில் 50 - 100 மி.மீ பதிவாகியுள்ளது.

ஆறுகளின் நீர்மட்டம்

கடும் மழை நீடிக்குமானால் களுகங்கை, மஹா ஓயா மற்றும் அத்தனுகல ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர் நிலையிலேயே காணப்படும் நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

காற்றின் வேகம்

எதிர்வரும் இரு தினங்களுக்கு காற்றின் வேகமானது புத்தளம் தொடக்கம் அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு , காலி வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோ மீற்றர் வரையில் வீசக்கூடும். கடும் மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் ஏனைய அடிப்படை தேவைகளுக்காக 38 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  களுத்துறை, இரத்திரனபுரி, கேகாலை, காலி, மாத்தறை, கம்பஹா, புத்தளம், குருணாகல் மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக முப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக 118 படகுகள், 7 ஹெலிகொப்டர்கள், 25 டிரக் வாகனங்கள் என்பனவும் குறித்த பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.