முத்தலாக் முறையை ஒழித்ததற்காக முஸ்லிம் பெண்கள் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது...

"பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்றது. இன்றுடன் நான்கு  ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. பிரதமராக மோடி பதவியேற்ற போது இந்தியாவின் கடைக்கோடி சாமானிய மக்களின் வளர்ச்சி, பெண் கல்வியை மேம்படுத்துவேன் என உறுதி கூறினார்.

நான்கு ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. மோடி அரசின் சாதனை குறித்து பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களை சந்தித்து விளக்கி வருகிறார்கள். அதன்படி இன்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாட்டில் ஏழைகள் அனைவருக்கும் இலவச எரியாவு இணைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நாட்டில் ஒரு கோடியே 25 இலட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

தூய்மை திட்டத்தின் கீழ் இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுத்து கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செல்வமகள் சேமிப்பு திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசு பெண் ஊழியர்களுக்கு 12 வாரமாக இருந்த பிரசவ விடுப்பு 22 வாரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தலாக் முறையை ஒழித்ததற்கு மோடிக்கு முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தினமும் 30 கி.மீ. தூரம் என்ற நோக்கத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள 56 விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இரட்டை ரயில் பாதை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இதுவரை 93 இலட்சம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் ரூ. 28 ஆயிரம் கோடி மதிப்பில் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது." என்றார்.