ரி.விரூஷன்

யாழ்ப்பாணம் - வலிகாமம்  வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் போலி உறுதிகளை தயார் செய்து காணி மோசடிகள் இடம்பெறுவதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் காரணமாக இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த பொது மக்களது காணிகள் பல தற்போது பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் அக் காணிகளின் உரிமையாளர்கள் பலர் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வரும் நிலையில் இங்குள்ள சிலர் அக் காணிகளிற்கு போலியான உறுதிகளை தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் பொது மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்னரே காணி தொடர்பான வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் 1987ஆம் ஆண்டு நீதிமன்றம் எரிக்கப்பட்ட போது ஆவணங்கள் பலவும் எரிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு ஆவணங்கள் எரிக்கப்பட்ட காணிகளையும்,  நீதிமன்றம் எவரும் உட் பிரவேசிக்க கூடாது என உத்தரவு போட்ட காணிகளையும் தற்போது சிலர் போலியான உறுதிப்பத்திரங்களை தயார் செய்து விற்பனை செய்து வருவதாகவும் இவற்றிக்கு பொலிஸார் சில சமயங்களில் துனை போவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் போலியான உறுதிப்பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பாக பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் நீதிமன்றகள் கவனமெடுக்க வேண்டும் எனவும் அம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.