(எம்.மனோசித்ரா)

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழுமையான அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சூழலை உருவாக்கும் வகையிலேயே 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அதற்கு கூட்டு எதிர்கட்சி ஒரு போதும் இடமளிக்காது எனவும் குறிப்பிட்டார். 

ஜே.வி.பியினால் 20 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தம் நேற்று  வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கூட்டு எதிர்கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில், 

20 ஆம் சீர்திருத்ததிற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் கூட்டு எதிர்கட்சினால் தீர்மானமொன்று இன்னும் எடுக்கப்படவில்லை. அதற்கான கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் அதற்கு கூட்டு எதிரணி ஆதரவளிக்காது என்பதே எமது நிலைப்பாடாகும். 

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதிகாரங்கள் அனைத்தும் பாராளுமன்றத்தை சேரும். நாட்டில் ஜனாதிபதிக்கு அடுத்து அதிகாரங்கள் பெற்றவர் பிரதமராவார். எனவே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் அடுத்து அதிகாரங்கள் யார் வசம் என்ற சிந்திக்கும். அவற்றை கைப்பற்றக் கூடியவராக பிரதமர் காணப்படுவார். எனவே ஜே.வி.பியின் 20 ஆம் சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதிகாரங்கள் அனைத்தும் ரணில் வசம் செல்வதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன. 

ஆனால் ஐ.தே.க.வினுடைய அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து கொள்கைகளுமே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொறுத்தமற்றதாகவே காணப்படுகின்றது. எனவே அதிகாரங்களை கைப்பற்றுவதற்கு கூட்டு எதிர்கட்சி ஒரு போதும் ஒத்துழைப்பு வழங்காது. அதே வேளை மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி பீடமேறுவதையும் அங்கீகரிக்காது என்றார்.