"வட மாகாணத்திற்கு வருகை தருகின்ற புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் வட மாகாணத்தின் வளங்களை பயன்படுத்த வேண்டும்" என யாழ். வணிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான இ.ஜெயசேகரன் தெரிவித்தார். 

இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணங்களாகும். யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையிலும் முழுமையான அபிவிருத்தி அடையவில்லை. மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் தீர்வு விடயம் முழுமையான முயற்சிகள் எவையும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இது ஒருபுறமிருக்க அபிவிருத்தி பணிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வருகிறது. இவ்வறான சூழலில் எமது வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளின் வரவு சுமாராகவே உள்ளது. 

இவ்வாறு வடக்கு மாகாணங்களுக்கு வருகை தருகின்றவர்கள் நம்மவர்க்ள சரி, வெளிநாட்டவர்கள் சரி வடக்கு மாகாணத்தின் வளங்களை குறிப்பாக ஹோட்டல்கள், போக்குவரத்து வாகனங்கள் மற்றும் உணவுகள் விசேடமாக உள்ளூர் உற்பத்திகளை பயன்படுத்துவதற்கு ஆர்வத்தை காட்ட வேண்டும்.

இவ்வாறான வளங்களை பயன்படுத்துகின்றபோது வடமாகாணத்தில் உள்ளவர்கள் தமது பொருளாதார வளங்களை அதிகரித்துக்கொள்வதுடன் பொருளாதார ரீதியில் முன்னேறக்கூடிய நிலை ஏற்படும். மேலும் இவ்வாறு வெளிநாட்டவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் செய்கின்றபோது உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதுடன் இதற்கான சந்தை வாய்ப்புக்களும் அதிகரிக்கும்.

வடக்கின் தற்போதைய சூழலில் உள்ளூர் உற்பத்திகள் செய்வதற்கு நம்மவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றார்கள். இதனை இன்னும் ஊக்கப்படுத்துவதற்காக இவ்வாறான திட்டங்களை ஊக்குவிப்பது அனைவருக்கும் நன்மை அளிப்பதாகவே இருக்கும். எனவே அடுத்துவரும் காலங்கள் சுற்றுலா பயணிகள் முதல்கொண்டு நம்மவர்கள் இலங்கைக்கு வருவது அதிகரிக்கும் காலமாக உள்ளதால் வடக்கு மாகாணத்தின் வளங்களை பயன்படுத்துவதற்கு ஆர்வம் கொள்ள வேண்டும்." என அவர் மேலும் தெரிவித்தார்.