கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் பல்வேறு சிகிச்சைப்பிரிவுகள் போதிய இடவசதிகள் இன்றியும் கட்டட வசதிகள் இன்றியும் இயங்கி வருவதனால் நோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதில் வைத்தியசாலை நிர்வாகமும் சிகிச்சை பெறச்செல்லும் நோயாளர்களும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கிளிநொச்சி  மாவட்டத்தின் சுமார் 1,35,000 மேற்பட்ட மக்களுக்களினதும் ஏனைய முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பகுதியில் வாழும் மக்களுக்கும் சிகிச்சைகளை வழங்கவேண்டிய நிலையில் காணப்படுகின்ற கிளிநொச்சி பொதுவைத்தியசாலை இன்றும் பல்வேறு தேவைகள் கொண்ட ஓர் வைத்தியசாலையாகவே காணப்படுகின்றது.

வெளிநோயாளர் பிரிவுக்கான போதிய இடவசதி, மாதாந்த கிளினிக்  நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்குவதற்கான இடவசதி என்பன பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது.

இதைவிட, எலும்பு முறிவு, சிகிச்சைப்பிரிவு, ஆய்வுகூடம், பதிவாளர் அலுவலகம், பொலிஸ் பிரிவு களஞ்சிய வசதி என்பன இல்லாத நிலை காணப்படுவதுடன், உள நல சிகிச்சைப்பிரிவிற்கான உள்நோயாளர் விடுதி மற்றும் ஏனைய விடுதிகளும் போதிய இட வசதிகள் இன்றி காணப்படுகின்றன. 

இதனைவிட, கண் நோயாளர்களுக்கான உள்நோயாளர் விடுதி, ஆய்வுகூடம், விபத்துப்பிரிவு,  என்பனவும் தேவையாகவுள்ளன.

இவ்வாறு பல்வேறு தேவைப்பாடுகள் கொண்ட இவ்வைத்தியசாலையில் நிலவுகின்ற பௌதீக வள நெருக்கடிகளால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் அதேநேரம் இந்தமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற வைத்தியசாலை நிர்வாகம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.