இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நேற்று ஜனாதிபதி மாளிகையில் கையளித்தனர்.

மொசாம்பிக் நாட்டின் உயர்ஸ்தானிகரும் சுவீடன், பின்லாந்து, சவூதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் தூதுவர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு,

01- Mr. Ermindo  Augusto Ferreira – மொசாம்பிக் நாட்டின் உயர்ஸ்தானிகர்

02- Mr. Klas Molin  -  சுவீடன் தூதுவர்

03- Mr. Harri Kamarainen – பின்லாந்து தூதுவர்

04- Mr. Abdulnaser H.Al Harthi  - சவூதி அரேபிய தூதுவர்

05- Mr. Augusto Montiel  - வெனிசுலா தூதுவர்

குறித்த நிகழ்வின்போது புதிய இராஜதந்திரிகளிடையே உரையாற்றிய ஜனாதிபதி அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையுடன் நாட்டின் அபிவிருத்திக்காக உலகின் சகல நட்பு நாடுகளினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல் தமது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் எனவும் ஜனாதிபதி  நம்பிக்கை தெரிவித்தார்.

இதன்போது கருத்துத்தெரிவித்த சுவீடன் தூதுவர் Klas Molin சுகாதாரம், கல்வி மற்றும் தகவல் தொழிநுட்பத் துறைகளில் காணப்படும் இலங்கையுடனான தொடர்புகளை பலப்படுத்துவதற்கு தமது பதவிக்காலத்தில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

பேண்தகு அபிவிருத்தி அனுபவங்கள் பலவற்றைக் கொண்ட பின்லாந்து தனது அனுபவங்களை இலங்கையுடன் பரிமாறிக்கொள்வதற்கான செயற்திட்டங்களில் ஈடுபட எதிர்பார்ப்பதாக பின்லாந்தின் புதிய தூதுவர்  Harri Kamarainen இதன்போது தெரிவித்தார்.