(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

தேசிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளானது மக்களுக்காக அமைந்துள்ளதா? அல்லது தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்த நிறுவனங்கள், மாபியாக்காரர்களை  திருப்திப்படுத்துவதற்காக அமைந்துள்ளதா என்பது கேள்விக்குறியாகவுள்ளது என்று கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில்  இன்று வெள்ளிக்கிழமை நிதி அமைச்சின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது இருந்த கடன்களை விடவும் 40 வீதக் கடன் கடந்த மூன்று ஆண்டுகளில் உயர்வடைந்துள்ளது. சகல பக்கமும் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், சாதாராண நடுத்தர மக்கள் என அனைவரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டு வியாபாரிகளுக்கும், கறுப்புப்பண கொள்ளையர்களுக்கும் மட்டுமே அரசாங்கம் பூரண சுதந்திரம் கொடுத்துள்ளது. 

புதிய லிபரல் வாதக் கொள்கையில் இந்த அரசாங்கம் பயணித்துக்கொண்டுள்ளது. புதிய சட்டங்கள் கொண்டுவந்து வெளிநாட்டு கொள்ளைக்காரர்களுக்கு சுதந்திர வியாபார நடவடிக்கைகளுக்கு இடம்கொடுத்து வருகின்றது. மத்திய வங்கி சட்டங்களை மாற்றி வெளிநாட்டு கறுப்புப்பணங்களை இலங்கையில் தூய்மையாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இவர்களது பொருளாதாரக் கொள்கைகளானது மக்களுக்காக அமைந்துள்ளதா அல்லது தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்த நிறுவனங்கள், மாபியாக்காரர்களை  திருப்திப்படுத்துவதற்காக அமைந்துள்ளதாக என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்றார்.