(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றி அப் பகுதியில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து காலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

 

முகமாலைப் பகுதியில் சுமார் 300 குடும்பங்களும் எப்போது குடியேற்றப்படும் என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அரசன்கேணி, வேம்படுகேணி, கிளாலி, முகமாலை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் நிலக்கண்ணிவெடி ஆபத்துள்ள பிரதேசங்கள் தவிர்த்த ஏனைய எல்லா பிரதேசங்களிலும்  இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் முகமாலை முன்னரங்கு பகுதியில் யுத்த காலத்தின் போது அதிகளவான  நிலக்கண்ணிவெடிகள்  பல அடுக்குகளாக புதைக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவற்றை மிக விரைவில் அப்புறப்படுத்தி மக்களை மீள்குடியேற்றுவதில் பாரிய சிரமமுள்ளது.

எனினும் உலக நாடுகளின் கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்புகளுடன் இணைந்து எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் அப் பிரதேசத்திலுள்ள கண்ணிவெடிகளை அகற்றி வடக்கு, கிழக்கை கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தி மக்களை மீள்குடியேற்றுவோம் என்றார்.