பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகம் இலங்கை தொடர்பான 200 கோப்புகளை அழித்துள்ளது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்ற காலம் முதல் பிரிட்டன் இலங்கைக்கு இராணுவ பயிற்சிகளை வழங்கிய காலம் வரையான கோப்புகளே அழிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்பத்தில்  இலங்கைக்கும் பிரிட்டனிற்கும் இடையில் நிலவிய உறவுகள் குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலை தோன்றியுள்ளது.

1978 முதல் 1980 ஆம் ஆண்டுகாலப்பகுதியுடன் தொடர்புடைய  180 கோப்புகளை அழித்துவிட்டதை பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகம் உறுதி செய்துள்ளது.

எனினும் இந்த ஆவணங்கள் எப்படி எப்போது அழிக்கப்பட்டன  என்பதை  தெரிவிப்பதற்கு பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகம் மறுத்துள்ளது.

நிரந்தரமாக பாதுகாக்கப்படவேண்டிய தேவையில்லாத கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும்  தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை இராணுவத்திற்கு உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்ப காலத்தில் பிரிட்டன் வழங்கிய பயிற்சிகள் குறித்து  உரிய தகவல்கள் இல்லாத நிலையில் இந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது என குற்றவியல் துறை நிபுணர் ரச்செல் செயோகே தெரிவித்துள்ளார்.

இது குறித்து யுனெஸ்கோ அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கென்யா குறித்த ஆவணங்களும் இவ்வாறு வேண்டுமென்றே அழிக்கப்பட்டன என தெரிவித்துள்ள அவர் இலங்கை யுத்தத்திற்கு தயாராவதற்கு பிரிட்டன் எப்படி உதவியது என்பது குறித்து அறியும் உரிமை மக்களிற்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.