தூத்துக்குடிக்கு மத்திய படைகளை அனுப்ப தயார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தால் அங்கு வன்முறை வெடித்துள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். 

அந்த அதிர்ச்சி துக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் இன்றும் போலீசார் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியை நடத்தி வருகின்றனர்.

இரண்டாவது நாளாக இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜீவ் கவுபா தமிழக தலைமை செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது தூத்துக்குடியில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து அவர் கேட்டறிந்தார். தேவைப்பட்டால் தூத்துக்குடிக்கு மத்திய படைகளை அனுப்பி அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

மத்தியப் படைகள் தயாராக இருப்பதாகவும் ராஜீவ் கவுபா கூறியுள்ளார். தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார் என்றும் உள்துறை அமைச்சக செயலாளர் கவுபா  தெரிவித்துள்ளார்.