கொழும்பில் இப்படியொரு தொடர்மாடியில் மனித வாழ்க்கையா?

Published By: Vishnu

23 May, 2018 | 05:07 PM
image

'இது நாங்க நாப்பது வருஷம் உண்டு உறங்கி வாழ்ந்த வீடு. நாங்க தொழில் செய்யுற இடம் பக்கத்துல இருக்கு. எங்கட பிள்ளைகள் படிக்கிற பள்ளிக்கூடம் ரெண்டு, கண்ணும் தெரியாம நோயாளியா இருக்கிற என் மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்கிற வைத்தியசாலை எல்லாம் இங்க பக்கத்துலேயே இருக்கு. இப்ப வந்து கட்டடம் இடிஞ்சு விழப்போகுது, எல்லாரும் வெளியேறுங்கன்னு சொன்னா நாங்க எங்க போறது?" 

வேகந்தை விதானகே வீதியிலுள்ள அன்டர்ஸன் தொடர்மாடி குடியிருப்பில் பி1, பி2 பிரிவுகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகளை வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. இந் நிலையில் இடிந்துவிழும் நிலையிலுள்ள கட்டடத்தில் பல வருடங்களாக வசிக்கும் புஷ்பராஜாவிடமிருந்து கலங்கிய குரலோடு எழுந்த மேற்படி கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. 

வெளிப்பார்வைக்கு சாதாரண தொடர்மாடி குடியிருப்பாக காட்சியளிக்கின்ற அன்டர்ஸன் தொடர்மாடி குடியிருப்பின் வெளிப்புறத்தை முழுமையாக ஆராய்ந்த போது குடியிருப்பின் வெளிப்புறமெங்கும் செடிகளாகத் துளிர்த்த விதைகள் நன்கு வேர் விட்டு தற்போது மரங்களாக மாறியிருப்பதை காண முடிந்தது. கூடவே அதன் பாரதூரத்தன்மையினை உணராது கண்களில் கனவோடு பாடசாலைக்குச் செல்லும் சிறுமியரும், உற்சாகத்துடன் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களும் என அனைவருக்குமான சமூகப்பொறுப்பினை கேள்விக்குட்படுத்தி சென்றனர்.

சுவர்களுக்கூடாக வேர் விட்டு அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களால் குடியிருப்பின் சுவர்களெங்கும் ஏற்பட்டுள்ள வெடிப்பு, நீர் வழங்கல் வசதியின் குறைப்பாட்டினால் சுவர்களுக்கிடையே தொடர்ந்து கசியும் நீர் ஆகியன அன்டர்ஸன் தொடர்மாடி குடியிருப்பின் ஆயுட்காலம் வெகு சொற்பம் என்பதை  தெளிவாக உணர்த்துகின்றன. ஆனால் தற்போதுவரை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள 64 வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் வெளியேறவில்லை.   

குடியிருப்புவாசிகள் வேகந்தை அன்டர்ஸன் தொடர்மாடி குடியிருப்பிலிருந்து வெளியேற வேண்டுமெனவும் அவர்களுக்கு ஏரமுல்ல, சாலமுல்ல ஆகிய பிரதேசங்களில் புதிய வீடுகள் வழங்கப்படும் எனவும் கொழும்பு மாகாண சபை உறுப்பினர் எம்.அர்ஷாத் நிஜாம்தீன் தெரிவித்துள்ளார். எனினும் இவ்விடயத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக அங்குள்ள மக்கள் அங்கலாய்க்கின்றனர். 

தற்போது வேகந்தை விதானகே வீதியிலுள்ள அன்டர்ஸன் தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் 1978 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருபது வருடங்கள் வரை பத்தாம் இலக்க தோட்ட குடியிருப்பில் வாழ்ந்துள்ளனர். 1978 ஆம் ஆண்டளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பீட்டர் கலமன் என்பவர் வேகந்தை வீதி அன்டர்ஸன் குடியிருப்பை தற்காலிகமாக மக்களுக்கு வழங்கியிருக்கின்றார். பின்னர் அது மீளப் பெறப்படாமையினால் அம்மக்களின் நிரந்தர குடியிருப்பாக மேற்படி தொடர்மாடி மனைகள் மாறியுள்ளன. நான்கு தசாப்தங்களாக சந்ததிகளாக வாழ்ந்த வீடுகளிலிருந்து வெளியேறும் நிர்பந்தம் தற்போது தோன்றியுள்ளது. 

இங்கிருந்து வெளியேறும் மக்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான வீட்டு உறுதிப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். வீட்டு உறதிப்பத்திரமற்ற குடியிருப்பாளர்கள் புதிய வீட்டிற்கு தலா 240, 000 ரூபா செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் இயலுமை அற்றவர்கள் முற்பணமாக 10,0000 ரூபாவை செலுத்துவதுடன் பின்னர் மிகுதி தொகையினை செலுத்த வேண்டும். 1978 ஆம் ஆண்டளவில் தற்காலிகமாக வழங்கப்பட்ட குடியிருப்பு என்பதால் அநேகமானோரிடம் வீட்டுறுதிப் பத்திரங்கள் இல்லை. அதேவேளை புதிய வீட்டினைப் பெற்றுக் கொள்வதற்கு பணம் செலுத்தும் இயலுமையும் அவர்களிடம் இல்லை. 

எல்லாவற்றையும் கடந்து இத்தனை வருடங்களில் 'எமது மண்" எனும் உணர்வை விதைத்துள்ள வேகந்தை பிரதேசமும் வேகந்தை பகுதியிலேயே நிலைத்துவிட்ட தொழில்வாய்ப்பும் குடியிருப்பிற்கு அருகிலேயே அமைந்துள்ள பாடசாலை வைத்தியசாலை மற்றும் மேலும் பல வசதிகளும் அன்டர்ஸன் குடியிருப்பிலிருந்து மக்கள் வெறியேறாதமைக்கு காரணமாகியுள்ளன. 

வேகந்தை பிரதேசத்திலிருந்து வெளியேறி புதிய பிரதேசத்தில் குடியேறும் பட்சத்தில் தமது தொழில் வருவாய், வாழ்வாதாரம் போன்றவற்றிற்கு அரசாங்கம் எவ்வித தீர்வை பெற்றுத்தரும் என்னும் கேள்வியை எழுப்புகிறார் ஏ.ஜே.எம்.புரொபைடீன் எனும் குடியிருப்பாளர். இன்றோ நாளையோ இடிந்துவிழும் நிலையிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒருபுறம் அச்சத்தை விதைத்தாலும் அங்கிருந்து வெளியேறிய பின்னரான நிலை என்ன எனும் கேள்வி தம்மை வெளியேற விடாது தடுக்கிறது என்கிறார் புஷ்பராஜா. 

பாதுகாப்பற்ற குடியிருப்பாக அடையாளம் காணப்பட்டுள்ள வேகந்தை விதானகே மாவத்தையிலுள்ள அன்டர்ஸன் தொடர்மாடி குடியிருப்பிற்கு பதிலாக அதே பிரதேசத்திலேயே புதிய குடியிருப்பு வசதியை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது. அத்தோடு திடீரென வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கும் அரசாங்கம் தமது வாழ்வாதாரம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர். தற்போது நிலவும் அடைமழை வெள்ளம் என்பன இக்குடியிருப்பின் பாதுகாப்பு நிலையினை மேலும் கேள்விக்குள்ளக்கியுள்ளன. தொடர் மழை காலநிலையில் கட்டடம் எப்போது இடிந்துவிழும் எனும் அச்சத்துடன் குடியிருப்புவாசிகள் ஜீவிக்கின்றனர்.

இங்கு வசிக்கும் அறுபத்துநான்கு வீடுகளைச் சேர்ந்தவர்கள் அனைத்தையும் விடுத்து சடுதியாக வேறொர் பிரதேசம் நோக்கி நகருதல் என்பது அவர்களின் நிலைத்திருப்பை கேள்விக்குள்ளாக்கும். அதேவேளை வெளியேறத் தாமதிக்கும் ஒவ்வோர் வினாடியும் உயிரச்சம் அவர்களோடு சமாந்தரமாகப் பயணிக்கும். 

எதிர்காலத்தை நோக்கிய நகர்வோடு துள்ளித்திரியும் சிறார்கள் அடங்கிய ஒரு சமூகத்தின் பெரும் பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. விரைந்து செயற்படத் தவறும் ஒவ்வோர் நொடியும் பல உயிர்களுக்கான உத்தரவாதம் இழக்கப்பட்டுக் கொண்டிருக்கும் என்பதை உணர்ந்து அரசாங்கம் செயற்பட வேண்டும்.

(நா.தனுஜா)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்