வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுடன் தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பரிசோதனை செய்து வந்தது.  இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜேவும்  தென்கொரிய பகுதியில் அமைந்துள்ள பன்முஞ்சோமில் ஏப்ரல் மாதத்தில்  நடந்த உச்சிமாநாட்டில் சந்தித்துப்பேசினர்.

அதை தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிட்ட கிம் ஜாங் உன்னும், மூன் ஜேவும்  கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றவும், கொரியப்போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வருவதற்காக பணியாற்றவும் உறுதி கொண்டிருப்பதாக அறிவித்தனர்.

இந் நிலையில் வட கொரியாவின் புங்யே-ரி அணு ஆயுத பரிசோதனை தளம் பருவநிலைக்கு ஏற்ப வெள்ளி கிழமைக்குள் அழிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக  செய்தி சேகரிப்பதற்காக வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அவர்களுடன் தென்கொரிய பத்திரிகையாளர்கள் கலந்து கொள்வதற்கு முதலில் வடகொரியா அனுமதி வழங்கவில்லை.

அமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவ கூட்டு பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சியோல் உடனான உயர்மட்ட அளவிலான தொடர்பையும் வடகொரியா துண்டித்தது.

இந்நிலையில் தென்கொரியாவின் 8 பத்திரிகையாளர்கள் கொண்ட பட்டியலுக்கு வடகொரியா அனுமதி வழங்கி உள்ளது என சியோல் ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.