நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனுமதி மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்துகிடைத்துள்ளது. எனவே இதுவரை அவ்வாறான வசதிகள் கிடைக்காதவர்கள் தங்கள் பகுதி கிராம சேவகரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு வடக்குமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மா.ச.உறுப்பினருமாகிய வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக வட மாகாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தமது பூர்வீக இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்று வதற்காக விசேட செயலணியொன்று மீள்குடியேற்றஅமைச்சினால் கடந்த 2016ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டது. 

இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு வசதியாக வீட்டுத்திட்டம், உட்கட்டுமான அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்குவதே இந்தசெயலணியின் நோக்கமாகும். 

எனினும் துரதிஷ்டவசமாக குறித்த செயலணியின் திட்டத்தில் இதுவரையில் தமிழ்மக்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. 

இதுதொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றமுறைப்பாட்டை தொடர்ந்து இம்மாதம் 16ஆம்  திகதி மீள்குடியேற்ற அமைச்சர்  டி. எம்.சுவாமிநாதன் அமைச்சில் சந்தித்து கலந்தரையாடியிருந்தேன். 

குறித்த சந்திப்பின் போது நீண்டகாலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்த தமிழ்மக்களையும் இத்திட்டத்தில் உள்வாங்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தேன். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஒப்பதல் வழங்கியிருந்தார். 

இதனடிப்படையில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால் வடக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறுவுறுத்தல் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

குறித்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் முடிவுத் திகதி எதிர்வரும் ஜூன்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே 1990ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியேற்றத்திற்கான வசதிகள் கிடைக்காதவர்கள் உங்கள் பகுதி கிராமசேவகர்களிடம் விண்ணப்படிவங்களை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்  என தெரிவித்துள்ளார்.