தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீது பொலிஸார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

துப்பாக்கி சூட்டு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிஸார் தடியடி நடத்தி கலைத்ததையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டததையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந் நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.  போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் முயன்ற போது  வாக்குவாதம் முற்றிய நிலையில் பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். பொலிஸாரும் தடியடி நடத்தினர். 

ஒரு கட்டத்தில் பொலிஸார்  துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் 22 வயதான காளியப்பன் என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.