(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

இயற்கை அழிவுகளை தடுக்க பணத்தை ஒதுக்கி தீர்வுகாண முடியாது. அதையும் தாண்டிய நீண்டகால பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இப்போது மலையக பிரதேசங்களின் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அழிவுகள் ஏற்பட முன்னர் உடனடியாக நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக தெரிவித்தார். 

பாரளுமன்றத்தில் இன்று புதன்கிழமை தேசிய சூழல் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து மேலும் தெரிவித்தாவது,

சூழல் மாசு மற்றும் அனர்த்தங்களை தடுக்க அரசாங்கத்தினால் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியவில்லை. உடனடியாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை தடுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் அனர்த்தங்களை தடுக்க எதிர்கால நகர்வுகளை முன்னெடுக்க முடியும். 

வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகளை  தடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். அனர்த்தங்களில் இருந்து தப்பித்துகொள்ள பொதுமக்கள் ஏதேனும் வழிமுறைகளை கையாண்டு தப்பித்துக்கொள்கின்றனர். மாறாக அரசாங்கமாக இவற்றினை தடுக்க எந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளது.  

அரசாங்கம் நிதியை மாத்திரம் ஒதுக்கி அனர்த்தங்களை தடுக்க முடியாது. அவ்வாறு கொடுக்கும் இந்த பணம் அரசாங்கத்தின் பணம் இல்லை. மக்களின் வரிப்பணமாகும். ஆனால் பணத்தையும்  தாண்டிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இப்போது நிலவும் காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் மண் சரிவுகள் ஏற்படவில்லை, ஆனால் அடுத்த அனர்த்தம் ஒன்று இடம்பெற முன்னர் உடனடியாக மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மலையக பிரதேசங்கள் பாரிய அச்சுறுத்தலில் உள்ளன. ஆகவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதேபோல் இலங்கையில் துறைமுக நகர் அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது சூழலில் பாதுகாப்புகள் குறித்து. இந்த நகரை புனரமைக்க கருங்கல் துண்டுகள் தேவைப்பட்டது. இன்றும் தேவைப்படுகின்றது. 

இதற்காக கற்களை உடைத்து எடுக்க இலங்கையில் 11 மாவட்டங்களிலிருந்து கற்கள் உடைக்கப்படுகின்றது இதனால் பாரிய நெருக்கடி ஏற்படும். 

இதற்காக பாரிய மலைகளை உடைத்து கற்கள் அகற்றப்படுகின்றன. இவை பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளாகும். சூழல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  

நாட்டின் இயற்கை பிரச்சினைகளை இயந்திரங்கள், தொழினுட்பங்கள் மூலமாக சமாளிக்க முடியும், தீர்வுகாண முடியும் என அரசாங்கம் நினைக்கின்றது. இயற்கையை அழித்து செயற்கையாக நடவடிக்கைகளின் மூலமாக  தடுக்க முடியாது. முட்டாள் தனமான தொழிநுட்ப தீர்வுகளை பற்றி சிந்திக்கக் கூடாது. எமது நாடு இயற்கையுடன் இணைந்த நாடு. மரங்கள், மலைகள், நதிகள் அதனுடன் இணைந்த இயற்கை தன்மை கொண்ட நாடு. இவற்றினை  செயற்கை திட்டங்கள் மூலம் உருவாக்க முடியாது. 

மேலும் இப்போது சூரிய சக்தி செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் கருத்துக்களை கூறுகின்றனர். சூரிய சக்தி திட்டங்கள் நல்ல விடயம். அதில் எமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சூரிய சக்தி மின் உற்பத்திகளை உருவாக்க காடுகளை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. 

அம்பாந்தோட்டையில் யானைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காட்டு வனப்பகுதியில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. 600 ஏக்கர் நிலப்பரப்பும், 300 ஏக்கர் காட்டு பரப்பு ஆகியன அம்பாந்தோட்டை பகுதியில் அகற்றப்பட்டு வருகின்றது. 

அதேபோல் புருகாக்கந்தை பிரதேசதத்திலும் இவ்வாறான  நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகின்றது. இவை முட்டாள் தனமான நடவடிக்கைள் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். 

வில்ப்பத்து  விவகாரத்திலும் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டும். வில்பத்து விவகாரத்தில் இனவாத அரசியல் தலைமைகள் தமது சுயநல நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடாது, அதேபோல் வில்பத்துவை  பாதுகாப்போம் என கூறி அதற்கு எதிரான இனவாத சக்திகளையும் தடுக்க வேண்டும். 

வில்பத்து பகுதியில் முஸ்லிம் மக்களின் வசிப்பிட  உரிமைகளை பாத்துக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இடங்களில் காணிகளை வழங்க வேண்டும். அதேபோல் வனப் பகுதியையும் பாதுகாக்க வேண்டும். 

வில்பத்து வன பிரச்சினையை வைத்துகொண்டு  இனவாத செயற்பாடுகளை  முன்னெடுப்பதை  அனைவரும் உடனடியாக நிறுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் மூலமாக விரட்டியடிக்கபட்ட வில்பத்து பிரதேச முஸ்லிம் மக்கள் உள்ளனர். அதை நாம் நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த காரணத்தை அடிப்படையாக வைத்து காடுகளை அழிக்கும் இனவாத  அரசியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதனை தடுக்க வேண்டும் என்றார்.