தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிபரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது வெடித்தகாரணமாக  பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 பொலிஸார் உட்பட 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. போராட்டங்களும் நடைபெறுகின்றன.

இந் நிலையில் லண்டனில் வசிக்கும் தமிழர்களும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குனர் அணில் அகர்வாலுக்கு லண்டனிலும் வீடு உள்ளது.

அந்த வீட்டை முற்றுகையிட்ட லண்டன் வாழ் தமிழர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோஷங்களை எழுப்பினர். துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். லண்டன் நகரில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.