(இரோஷா வேலு) 

ஒரு வருடத்திற்கும் மேலாக வீசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இரு சீனப் பிரஜைகளை  நேற்று கைது செய்ததாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்தாவது,

குடிவரவு- குடியகல்வு சட்டத்திற்கெதிராக வீசா இன்றில் நாட்டில் வசித்து வந்ததாக கூறப்படும் சீனப் பிரஜைகள் இருவர் நேற்று கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

2017 ஆம் வருட ஆரம்பத்தில் நாட்டில் சுற்றுலா வீசாவில் இலங்கை வந்த இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக நாட்டைவிட்டு திரும்பாமல் சட்டவிரோதமான முறையில் பல்வேறு இடங்களில் பதுங்கி வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையிலேயே கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் குறித்த இருவரும் நேற்றுமுன்தினம் கொள்ளுபிட்டி பிரதேசத்தில் வைத்து கடையொன்றுக்கருகிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

 குறித்த இருவரையும் கைதுசெய்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தற்காலிகமாக இருவரும் அத்துருகிரிய பிரதேசத்தில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது. 

மேலும் இருவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் 48 வயதுடைய பெண்ணொருவரும் 27 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்களை கைதுசெய்து நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.