(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

கட்சி தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும். மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை. பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் எமது போராட்டத்தை இன்னும் முடிக்கவில்லை. உண்மையான மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படும் வரை  எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன்  பிரதி சபாநாயகர் பதவிக்கு அனைத்து கட்சிகளின் இணக்கத்தின் பால் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும். முழு பாராளுமன்றத்தின் இணக்கம் ஏற்பட வேண்டும். ஆகவே கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து இணக்கத்திற்கு வந்து சிறந்த ஒருவரை தெரிவு செய்ய வேண்டும். பிரதி சபாநாயகர் நியமனம் தொடர்பில் பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இன்னும் எதனையும் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அனைவரும் கட்சியில் பாரிய மறுசீரமைப்பினை எதிர்பார்த்தனர். மறுசீரமைப்பின் ஊடாக கிராம, நகர மட்டத்தில் கட்சியை  விருத்தி செய்ய திட்டமிட்டோம். இதற்காக கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் பெரும் முயற்சிகளை முன்னெடுத்தனர். எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட்டவில்லை. முக மாற்றம் ஏற்பட்டாலும் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை. பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் எமது போராட்டத்தை இன்னும் முடிக்கவில்லை. உண்மையான கட்சி மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படும் வரை  அதனை தொடர்ந்து முன்னெடுப்போம். 

கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும். எனினும் அதற்காக நாளைய தினம் கட்சியின் தலைவரை இராஜினாமா செய்யுமாறு கோரவில்லை. எனினும் இதனை விட மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கட்சியை மாற்றத்தின் பால் கொண்டு சென்று தேர்தலில் வெற்றி கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்கின்றேன். சுயாதீனமாக அமரும் நோக்கம் எனக்கு இல்லை. 

சபாநாயகர், பிரதி சபாநாயகர் பதவிகளை அனைத்து கட்சிகளின் இணக்கத்தின் பால் தெரிவு செய்ய வேண்டும். முழு பாராளுமன்றத்தின் இணக்கம் ஏற்பட வேண்டும். ஆகவே கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து இணக்கத்திற்கு வந்து சிறந்த ஒருவரை தெரிவு செய்ய வேண்டும். பிரதி சபாநாயகர் நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு தீர்மானத்தை இன்னும் அறிவிக்கவில்லை என்றார்.