தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் அங்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் பத்து பேர் பலியானர். 

இந்த அரசபயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையுலகினர் பலர் கொந்தளித்திருக்கிறார்கள். நேற்று ஜி.வி பிரகாஷ்குமார் நடித்த ‘செம’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கூட தொடங்குவதற்கு முன்னர் தூத்துகுடியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிலையில் இது குறித்து புரட்சி தமிழன் என்றழைக்கப்படும் நடிகர் சத்யராஜ் வீடியோ வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது...

‘தூத்துக்குடியில் நடந்த கொடுமைக்கு எனது கண்டனத்தை பதிவுசெய்கிறேன். இறந்தவர்கள் அத்தனை பேருக்கும், அந்த குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்கிறேன்.

உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். ஒன்றே ஒன்றை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா? இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும், நம் தமிழ்நாட்டு மக்களும் முக்கியமா? என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

இது நெஞ்சம் பதைக்க வைக்கிறது. மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது. இந்தக் கொடுமைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொண்டு, இறந்தவர்களுக்கு என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண்கள் இறந்திருக்கிறார்கள், மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இதற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் ஒருவனாக' என்று தெரிவித்திருக்கிறார்.