இலஞ்சம் பெற்ற மேல்மாகாண இறைவரித் திணைக்களத்தின் களுத்துறை பிரதேச அலுவலகத்தின் சிரேஷ்ட மதிப்பீட்டாளர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு  கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த அதிகாரி அலுவலக கட்டிடத்திற்குள்ளே 25000 ரூபா இலஞ்ச பணத்தை பெற்றுக்கொள்ளும் வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரியொருவர் விலைக்கு வாங்கிய காணி பத்திரத்திற்கான முத்திரை கட்டணத்தை குறைத்து அறவிடுவதற்காகவே குறித்த இலஞ்சப் பணம் சந்தேகநபரால் கோரப்பட்டுள்ளது. 

கைது செய்த நபரை நேற்று இரவு களுத்துறை நீதவான் நீதமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.  

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.