(நா.தினுஷா)

 சுதந்திரமாக இந்த நாட்டில் இருப்பதற்கு காரணம் எமது இராணுவத்தின் சேவையே ஆகும்.  அதனால் தான் நான் ஆளும் மற்றும் எதிர்கட்சியினரிடம் விடுக்கும் கோரிக்கை எமது இராணுவத்தினரை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம் என்பதாகும்.

இந்த வேண்டுகோளை ஊடகங்களுக்கும் விடுக்கின்றேன் என்று பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை ஆரம்பித்து வைக்கும் வைபவம் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  தலைமையில்  இன்று  பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவ வீரர்களிடம் கேட்டுக்கொள்வதாவது அரசியல்வாதிகள் உங்களை பயன்படுத்த இடமளிக்கவேண்டாம் என்றும்.  நாங்கள் அனைவரும் கட்சி சார்பற்று இராணுவ வீரர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். உண்மையில் பார்த்தால் தற்போதைய அரசாங்கம் இராணுவவீரர்களை நல்ல விதத்தில் கவனித்துவருகின்றது. 

கடந்த அரசாங்கத்தில் இராணுவத்தினரை எப்படி கவனித்தார்கள் என்று நாங்கள் மறக்கவில்லை.  கடந்த கால அரசாங்கத்தில் இராணுவ வீரர்களை கல்வாய்களை சுத்தம் செய்யவைத்தார்கள். ஆனால் இன்று அவையனைத்தும் மாறிவிட்டது. இரணுவத்தினருக்கு எமது அரசாங்கமே உயரிய மரியாதையை வழங்கி வருகின்றது எனக் குறிப்பிட்டார்.