இலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்துவதற்காக இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு முன்னாள் வீரர்கள் பலர் தயாராகவுள்ளனர் என முன்னாள் வீரர் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளீதரன், ரோசான் மகநாமா, சிடத்வெட்டி முனி உட்பட பல வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை பொறுப்பேற்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் தலைவிதியை தீர்மானிப்பதற்கு பல முன்னாள் வீரர்கள் விரும்புகின்றனர். இலங்கை கிரிக்கெட்டில் பணியாற்றும் சில முன்னாள் முக்கிய வீரர்களும் இதில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர்கள் மௌனமாக உள்ளனர் ஆனால் அவர்கள் விரைவில் தங்கள் மௌனத்தை கலைப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தற்போதைய தேர்தல் முறையை சில அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் முக்கிய பதவிகளை வகிப்பவர்கள் இவர்களின் நிகழ்ச்சி நிரலிற்கு உதவுகின்றனர் எனவும் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.