(எம்.எப்.எம்.பஸீர்)

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் படு கொலைகள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியூமால் ரங்கஜீவவின் தொலைபேசியை குற்றப்புலனாய்வுப் பிரிவு விஷேட ஆய்வுகளுக்குட்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் சமலீ வீரசூரியவுக்கு அறிவித்தது.

 அத்துடன் இந்த கொலைகளுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கண்டறியவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சாட்சிகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் புலனாய்வுப் பிரிவினர் நீதிவனௌக்கு அறிவித்தனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 இல் இடம்பெற்ற கலவரத்தின் போது, சில கைதிகள் தேர்ந்தெடுத்து கொல்லப்பட்ட  விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் சமலீ வீரசூரிய முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சார்பில் மன்றில் ஆஜரான விசாரணை அதிகாரி இவ்விடயத்தை மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக   மன்றுக்கு அறிவித்தார்.

 இன்றைய வழக்கானது விசாரணைக்கு வந்த போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, துஷார கொஸ்தா, சேனக பெரேரா ஆகியோர்,  இந்த 27 பேரின் கொலையானது இராணுவம் உள் நுழைந்த பின்னரே இடம்பெற்றுள்ள நிலையில் அதற்கு உத்தரவிட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அதற்கான விசாரணைக்கு உத்தரவிடுமாறும் மன்றைக் கோரினர்.

 இது தொடர்பில் நீதிவான் சமலீ வீரசூரிய  குற்றப் புலனயவுப் பிரிவிடம் வினவிய போது, விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இதுவரை உத்தரவிட்டவர்கள் தொடர்பில் சாட்சியங்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறினர்.

 எனினும் இது தொடர்பில் மன்றில் கருத்துக்களை முன்வைத்த பாதிக்கப்பட்ட தரப்பினர், மேல் நீதிமன்ற நீதிபதியின் கீழான குழுவின் அறிக்கையில் பல சாட்சியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை சி.சி.டி. கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.

 இதனையடுத்து அவசியமான விடயங்களை உள்ளீர்த்து உத்தரவிட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சி.சி.டி.க்கு ஆலோசனை வழங்கிய நீதிவான் இந்த விவகாரத்தில் முதலாவது சந்தேக நபரான பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ, மெகசின் சிறையின் முன்னாள் அத்தியட்சரும் தற்போதைய சிறைச்சாலை ஆணையாளர்களில் ஒருவருமான (புனர்வாழ்வு)இரண்டாம் சந்தேக நபர் எமில் ரஞித் லமாஹேவா  ஆகியோரை  எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இவர்கள் இருவருக்கும் எதிராக  பொது இலக்குடன் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியமை, கொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை, கொலைச் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. தண்டனை சட்டக் கோவையின்  32 ஆம் அத்தியாயத்துடன் இணைத்து கூறப்படும் 102,113 (ஆ),198,296,358 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலையில் போதைப்பொருள், கையடக்கத் தொலைபேசி மற்றும் வேறு சட்ட விரோதப்பொருட்களை கைப்பற்றும் நோக்குடன் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஒத்துழைப்புடன் சிறைப்பாதுகாப்பு அதிகாரிகளால் 2012.11.9 ஆம் திகதி விஷேட சோதனை ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. 

இதன்போது கைதிகள் குழம்பியுள்ள நிலையில், நாளாந்த நடவடிக்கைகளுக்காக ஆயுதங்களை விநியோகம் செய்யும் சிறை ஆயுதக் களஞ்சியத்தை அவர்கள் சூறையாடி  அதில் இருந்த ஆயுதங்களை கொண்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.  நிலைமையானது இதன்போது பெரும் கலவரமாக  மாறியுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.

 இந் நிலையிலேயே கலகத்தின் இடை நடுவே கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க வெலிக்கடை சிறைச்சாலையை பொலிஸ் விஷேட அதிரடிப் படை சுற்றிவளைத்துள்ளது. இதன்போது 2009 நவம்பர் 9 ஆம் திகதி இரவு 12 மணியளவில்  பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது துப்பககிச் சூடு நடாத்திவிட்டு, சிறை அத்தியட்சரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதியூடாக தப்பிச் செல்ல சிலர் முயன்றுள்ளனர். இதன்போது அதிரடிப் படை நடாத்திய பதில் தாக்குதலில் இருவர் காயமடைந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்ற கைதிகள் மீது அதிரடிப் படை நடத்திய துப்பாககிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பதிவாகியுள்ள சாட்சியங்களின் பிரகாரம், இந்த சிறைக் கலவரமானது இராணுவமும் தலையீடு செய்த பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்பின்னர் தெரிவு செய்யப்பட்ட 8 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மாலன் எனப்படும் மலிந்த நிலேத்திர பெல்பொல, நிர்மல அத்தபத்து,மொஹமட் விஜேரோஹன, களு துஷார எனப்படும் துஷார சந்தன, அசரப்புலிகே ஜோதிபால, ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா,  சுசந்த பெரேரா, கொன்ட அமில எனப்படும் மலித் சமீர பெரேரா ஆகிய எட்டுப்பேருமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக சாட்சிகள் உள்ளன. 

சிறைக்கலவரம் அடக்கப்பட்ட பின்னர் அங்கு சிறைக்கு வந்ததாக கூறப்படும்  பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ மற்றும் மேலும் இருவர் இந்த கைதிகளை தெரிவு செய்ததாக  சாட்சிகள் உள்ளன.  ரங்க ஜீவ, எமில் ரஞ்சனுடனேயே சிறைக்கு வந்ததாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.   இதனையடுத்தே  பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவ, சிறை அத்தியட்சர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர்  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.