(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

"எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகள் வடக்கு மக்களுக்கு பிரச்சினையாக இல்லையா?" என பாரளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பார்த்து கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கேலியாக கேட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று சபை கூடிய வேளையில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாட்டின் தற்போதைய காலநிலை சீர்கேடு குறித்தும் எரிபொருள் விலையேற்றம் இவற்றின் மூலமாக மக்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலைமைகள் குறித்து விசேட விவாதம்  ஒன்றினை கேட்டிருந்தனர். கூட்டு எதிரக்கட்சியின் பாரளுமன்ற குழுக்களின் தலைவர் தினேஷ் குணவர்தன இந்த கோரிக்கையினை விடுத்திருந்த போதிலும் சபாநாயகர் அதற்கு அனுமதி இல்லை என கூறியதுடன் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கூடி ஆராய்ந்து வேறு ஒரு நாளில் விவாதத்தை நடத்தவும் கூறியிருந்தார். சபை முதல்வரும் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்த வேளையில் கூட்டு எதிரக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சபையில் எழுந்து நின்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். 

சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் விவாதம் ஒன்றினை கோருகின்ற நிலையில், சபையில் பெரும்பான்மை கோரிக்கை அதுவாக உள்ள நிலையில் சபாநாயகர் நடுநிலையாக செயற்பட்டு, நாட்டின் அவசரகால  நிலைமைகளை கருத்தில் கொண்டு நியாயமான தீர்வு வழங்க வேண்டும் என கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை வெளிபடுத்தினார் . கூட்டு எதிர்க்கட்சியின் சகலரும் எழுந்து நின்று தமது கோரிக்கையினை முன்வைத்த வேளையில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சபையில் இருந்த எவரும் இந்த விவாதத்தை கேட்காது அமைதிகாத்தனர்.  

இந்நிலையில் சபையில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆசனத்தின் அருகே அடுத்த ஆசனத்தில் எழுந்து நின்ற கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கூட்டமைப்பினரை பார்த்து வடக்கில் தமிழ் மக்களுக்கு எரிபொருள் விலை உயர்வு பிரச்சினை இல்லையா? அதனால்  உங்களுக்கு சிக்கல் இல்லையா? என நகைப்புடன் வினவினார். இதன் போது சபையில் அமர்ந்திருந்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் புன்னகையுடன் அமைதி காத்தனர்.