பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் 2018 பெண் தொழில்துறைகளுக்கான விருது வழங்கும் விழாவை சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் பெண்கள் மேலாண்மைக்கான அமைப்பு இணைந்து  முன்னெடுக்கவுள்ளது.

2018 ஆம் ஆண்டிற்கான பிரதான 50 பெண் தொழில்துறைகளுக்கான விருது வழங்கல் நிகழ்வு குறித்த ஊடக சந்திப்பு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. 

இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பெண்கள் மேலாண்மைக்கான அமைப்பின் ஸ்தாகர் சுலோச்சனா சேகர தெரிவிக்கையில், 

"இலங்கையிலுள்ள செயற்திறன்மிக்க பெண் தொழில்முயற்சியாளர்களை அடையாளப்படுத்துவதோடு எதிர்காலத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களை கவருதலை நோக்காக கொண்டு இவ்விருது வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.

இது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் சர்வதேச நிதி நிறுவனத்தின், வேலை செய்யும் பெண்களுக்கான செயற்திட்டத்தின் கீழ் இலங்கையில் 8ஆவது முறையாக நடாத்தப்படுகிறது. நுண், சிறிய மற்றும் தனியார்துறை வணிகங்களில் ஈடுபடும் பெண்கள் தமது திறன்களை வளர்த்து கொள்தல் மற்றும் உரிய பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ளல் ஆகியவற்றக்காக சர்வதேச நிதி நிறுவனம் பெண்கள் மேலாண்மைக்கான அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

இவ்வருட இலக்கான இலங்கை பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தல் ஏற்கனவே அடையப்பட்டு விட்டதாக கருதப்படுகிறது. கடந்த 7 வருடங்களாக  கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரையில் சிறப்பான முறையில் செயற்பட்டுவரும் பெண் தொழில் முயற்சியாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது என்றார்.