காவிரி மேலாண்மை வாரியத்திற்கான அனைத்து அதிகாரங்களையும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஸ்டாலின்  சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...

"அனைத்து கட்சி கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. காவிரி பிரச்சினையில் தன்னெழுச்சியாக போராடிக்கொண்டிருக்கின்ற தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரண்டாவதாக தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக குறுவை சாகுபடியை காப்பாற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

நான்காவதாக குருகுல கல்வி முறை, சமஸ்கிருத மொழி திணிப்பு ஆகியவற்றைக் கண்டிக்கின்ற வகையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஐந்தாவதாக, ஐ .ஏ. எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் செய்திருக்கும் மாற்றத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

எதிர்வரும் ஜுன் 12ஆம் திகதியன்று மேட்டூர் அணையை திறந்துவிடவேண்டும் என்று எல்லா கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழக அரசு உடனடியாக இதற்குரிய நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். உரிய முயற்சியை மேற்கொள்ளவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும்" என்றார்.

இச் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்பு சென்னை அறிவாலயத்தில் காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து கூட்டம் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினின் தலைமையில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.