பிள்ளைகளுக்கு தற்காப்பு கலையை கற்றுக்கொடுங்கள் : பெற்றோர்களுக்கு நடிகர்கள் கோரிக்கை!!!

Published By: Sindu

22 May, 2018 | 11:01 AM
image

பிள்ளைகளுக்கு தற்காப்பு கலையை கற்றுக்கொடுங்கள் என்று ‘எழுமின் ’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வையம் மீடியாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.பி விஜி தயாரித்து இயக்கியிருக்கும் எழுமின் என்ற படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோஸில் நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்களான சிம்பு, விஷால், கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் நடிகர் விவேக், நடிகை தேவயானி, நடிகர் பிரேம், நடிகரும் இயக்குநருமான அழகம் பெருமாள், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்,  நடிகர் உதயா, நடிகர் நந்தா, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.பி .விஜி மற்றும் இந்த படத்தில் நடித்த சாதனை படைத்த இளம் சாதனையாளர்களான பிரவீண், வினித், சுஜித், தீபிகா, கிருத்திகா என ஆறு குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நடிகர் சிம்பு இதன் டிரைலரை மேடையில் அமைக்கப்பட்டிருந்த விசேடமான டிஜிற்றல் தொடுதிரையை அழுத்தி வெளியிட்டார். 

விழா மேடையில் நடிகர் விஷால் கொடியசைத்து தொடங்கி வைக்க, படத்தில் அறிமுகமாகியிருக்கும் ஆறு இளம் சாதனையாளர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட தற்காப்பு கலையை நிகழ்த்தி காட்டி அனைவரின் பாராட்டினையும் பெற்றனர்.

திருப்பத்தூர் வீர கலைக்கூடம் என்ற பயிற்சி நிறுவனத்திற்கு படக்குழுவின் சார்பில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் நிதி உதவியை நடிகர் கார்த்தி வழங்கினார். 

நடிகர் கார்த்தி பேசுகையில்,

"நான் ஏராளமான பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அங்கு நடைபெறும் விழாவிற்கு செல்கிறேன். அங்குள்ள மாணவர்கள் அனைவரும் சினிமாவை நோக்கி தான் தங்களது கவனத்தை செலுத்துகின்றனர். சினிமா பாட்டு பாடுகிறார்கள். சினிமா டான்ஸ் ஆடுகிறார்கள். ஆனால் இங்கு வந்து பார்க்கும் போது, குழந்தைகள் மார்சியல் ஆர்ட்ஸில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  இதனை திரைப்படமாக உருவாக்கியிருப்பதற்கு தயாரிப்பாளரும், இயக்குநருமான விஜி சாருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த படத்தை என்னுடைய மகளை அழைத்துக் கொண்டு போய் பார்ப்பேன். ஏனெனில் இன்றைய சமுதாயம் அப்படி இருக்கிறது. செயின் பறிப்பு நடைபெறும் போது, அய்யய்யோ என்று பயந்து, அப்படியே நின்றுவிடுகிறார்கள். அப்படியல்லாமல், என் செயினையா பறிக்கிறாய்? என்று துணிச்சலுடன் அவனுடன் சண்டை போடவேண்டும். அதற்கு உங்களை மார்சியல் ஆர்ட்ஸ் தான் தயார்படுத்தும். அதனை கற்றுக்கொண்டால் மட்டும் தான் செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது தைரியத்துடன் எதிர்வினையாற்றமுடியும்.

சண்டை போடுகிறோமோ இல்லையோ, அடுத்த முறை இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பேன் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளலாம். என்னுடைய மகள் டோக்வோன்டோ வகுப்பிற்கு சென்றுக் கொண்டிருக்கிறாள். அவருக்கு இந்த வீடியோவை போட்டு காண்பிப்பேன். குழந்தைகள் டி.வி பார்க்கிறார்கள். ஐபேடில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என சொல்கிறோம். ஆனால் இந்த குழந்தைகள் ஆர்வத்துடன் தற்காப்பு கலையை கற்று அதனை இங்கு நிகழ்த்தி காட்டியது எனக்கு பிடித்திருக்கிறது.

இதற்காகவே இதன் பின்னணியில் உள்ள திருப்பத்தூர் வீரக்கலைகூடத்திற்கு என் சார்பில் ஐம்பதாயிரம் ரூபாயை உதவியாக அளிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளரை பற்றி யோசித்தேன். எந்த தைரியத்தில் இது போன்ற படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார். புயலின் போது ஒரு படகில் ஐந்து குழந்தைகளை வைத்துக் கொண்டு பயணிப்பது போல் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் வசதியானவர் என்று கேள்விப்பட்டேன். படகிற்கு பதிலாக இயந்திர படகில் பயணிப்பது போலிருந்தது. அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன். அத்துடன் அவர் நம்முடைய தமிழ் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை காப்பாற்றப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.

ஒவ்வொரு கதையை நாங்கள் கேட்கும் போது இது மக்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என்று நாங்கள் குழம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தைரியமாக குழந்தைகளை வைத்து அதிலும் தற்காப்பு கலையில் விருது பெற்ற ஆறு குழந்தைகளைவைத்து படம் தயாரித்த தயாரிப்பாளரை மனதார பாராட்டுகிறேன். இந்த கால குழந்தைகளுக்கு கமரா பயமேயில்லை என்று தெரியவருகிறது. ஏனெனில் குழந்தை பிறந்தவுடன் வைத்தியசாலையிலேயே செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். அத்துடன் இது போன்ற படங்கள் வெளியானால் தான் அதனை குழந்தைகளுக்கு போட்டு காண்பிக்கமுடியும். அதனால் இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்கவேண்டும்."என்றார்.  

நடிகர் விஷால் பேசுகையில்,

"நான் ஒவ்வொரு பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, அங்கு பேசும் போது, தயவு செய்து உங்களுடைய குழந்தைகளுக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இன்றைய சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கவேண்டும் என்றால் குழந்தைகளுக்கு எது குட் டச் ? எது பேட் டச் ?  என்பதைப் பற்றி தெளிவாக கற்பிக்கப்பட்டிருக்கவேண்டும். அதற்கு அந்த குழந்தைகளுக்கு தற்காப்பு கலை கற்றிருப்பது உதவியாக இருக்கும்.

மேடையில் நிகழ்த்தி காட்டிய செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான தற்காப்பு கலை பாராட்டுகுரியது. ஒவ்வொரு பெற்றோர்களும், தங்களுடைய குழந்தைகளுக்கு டான்ஸ் கிளாசுக்கு செல்ல அனுமதி கொடுப்பதை விட. பாட்டு கிளாசுக்கு செல்ல அனுமதி கொடுப்பதை விட இது போன்ற மார்சியல் ஆர்ட்ஸை கற்றுக்கொள்ள அனுமதியளித்தால், அந்த பெண் குழந்தைகளுக்கு ஆயுள் முழுக்க பேருதவியாக இருக்கும். கமர்சியல் அம்சங்கள் பற்றி கவலைப்படாமல் குழந்தைகளை வைத்து இது போன்ற தற்காப்பு கலையை மையப்படுத்தி படம் இயக்கி தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி."என்றார். 

நடிகர் விவேக் பேசுகையில்,

"தற்போது தமிழ்நாட்டில் கொடிகளையும், கொள்கைகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் கார்த்தி,  நடிகர் விஷாலும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். நடிகர் சங்க கட்டிட பணிக்காக ஞாயிற்று கிழமையன்று பாராமல் அங்கு சென்று பார்வையிட்டு பணிகளை முடுக்கி விடுகிறார்கள். 

எழுமின் என்ற இந்த டைட்டிலை பலர் ஏழு மீன் என்றும், எழு மீன் என்றும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இது எழுமின் என்று சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன். இது விவேகானந்தர் ஆற்றிய உரையில் இடம்பெற்ற Arise என்ற வார்த்தையின் தமிழாக்கம். இந்த படத்தை நான் ஒப்புக்கொண்டதற்கு ‘எழுமின் விழிமின்  உன் குறிக்கோளை அடையும் வரை நில்லாமல் உழைமின்.’ என்ற விவேகானந்தரின் உரையே காரணம். 

இந்த டைட்டிலுக்கு ஏற்ற வகையில் கதையும் இருக்கிறது. இந்த சமுதாயத்தில் விளையாட்டு உலகில் ஏழை எளிய மக்களிடத்தில் அற்புதமான திறமை இருக்கும் இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு பொருளாதார சிக்கல்களாலும், அரசியலாலும் வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். ஏனெனில் இது போன்ற இளம் சாதனையாளர்களுக்கு ஏற்படும் சங்கடங்களை எப்படி எதிர்கொண்டு அவர்களை வெற்றிப் பெறுகிறார்கள் என்பது தான் இதன் கதை. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். 

தற்போதைய ட்ரெண்ட் மாறிக்கொண்டிருக்கிறது. யோகி பாபுவிற்கு நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவிற்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் சினிமா பல விசயங்களுக்கு ஆரம்ப புள்ளியை வைத்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் மார்சியல் ஆர்ட்ஸை மையப்படுத்திய முதல் படமாக இந்த படம் இருக்கிறது. முழு நீள காமெடி படமான ‘பாலகாட்டு மாதவன் ’ படத்தை ரிலீஸ் செய்ய முதலில் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களை ஒப்பந்தம் செய்திருந்தோம். ஆனால் அந்த சமயத்தில் ஒரு பெரிய ஹீரோவின் படம் பாகுபலி படத்துடன் மோத விரும்பாமல் நாங்கள் ரிலீஸ் செய்த திகதியில் வெளியிட விரும்பினார். 

அதற்கு அப்போதைய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆதரவும் அவருக்கு கிடைத்தது. அதனால் எங்களுக்கு நூறு தியேட்டர்கள் தான் கிடைத்தது. இதனால் படம் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் அந்த தயாரிப்பாளர் மீண்டும் படம் தயாரிக்க எப்படி வருவார்?. ஆனால் தற்போது விஷால் தலைமையில் உள்ள தயாரிப்பாளர் சங்கம் சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்காக உண்மையாகவே பாடுபடுகிறது என்பதை இங்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். குப்புறப்படுத்த குமுதா, அர்த்தராத்திரியில் அமுதா என்று பெயர் வைத்து படமெடுத்து சம்பாதிக்கும் இந்த தமிழ் சினிமாவில், அருவி, ஜோக்கர் போன்று இந்த படத்தையும் ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்."என்றார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான விஜி பேசுகையில்,

"இந்த படம் தயாரிப்பதற்கு என்னுடைய மகன் தான் எனக்கு இன்ஸிபிரேசன். அவன் கிக்பாக்ஸிங் என்ற மார்சியல் ஆர்ட்ஸில் மாநில அளவில் வென்று சாதனைப்படைத்தான். ஆனால் அவருக்கு பரிசு அளிக்கப்படும் போது தங்கத்திற்கு பதிலாக வெள்ளி பதக்கம் தான் கொடுத்தார்கள். இதனால் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டான். அவனை தேற்றுவதற்காக அடுத்த நாள் நானே கடைக்கு சென்று தங்கபதக்கம் ஒன்றை வாங்கி கொடுத்து சமாளித்தேன். பின்னர் இது குறித்து விசாரிக்கும் போது. அதிலுள்ள அரசியல் புரிந்தது. அதைப் பற்றி விசாரித்தால் ஐந்தாறு கதைகளை எழுதுமளவிற்கு அதில் விசயம் இருந்தது. தமிழர்களின் வீரக்கலையான சிலம்பம் இன்னும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்படவேயில்லை என்ற அதிர்ச்சியான விசயமும் கிடைத்தது. அதனால் இது போன்ற தற்காப்பு கலைகளை மையப்படுத்தி ஒரு கதையை எழுதி அதனை திரைப்படமாக்குவோம் என்று எண்ணி இதனை தொடங்கினேன்.

உண்மையான சாதனையாளர்களை தேடி தேடி படத்தில் நடிக்கவைத்தோம். ஏனெனில் ஒரு நடிகர்களை சாதனையாளர்களாக காட்டுவதை விட.இ சாதனையாளர்களை நடிகர்களாக காட்டினால் பொருத்தமாக இருக்கும் என்று நம்பினோம். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த குழந்தைகள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். அதிலும் குறிப்பாக ஒரு குடோனில் இருபது நாள் சண்டை காட்சியொன்றை படமாக்கும் போது அவர்கள் அளித்த ஒத்துழைப்பு மறக்க முடியாது. இந்த கதையை விவேக்கிடம் கூறியவுடன் மறுக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். அத்துடன் நில்லாமல் இந்த படத்திற்காக பாடல் ஒன்றை எழுதி மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். இதில் பொலிட்டிகல் டயலாக் அதிகம் இருக்கிறது. இதுவும் ரசிகர்களால் வரவேற்கப்படும். குழந்தைகள் நடிக்கும் படத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு சண்டை காட்சி அமைத்துக் கொடுத்தார் சண்டை பயிற்சி இயக்குநர் மைக்கேல் மிராக்கல். எந்த குழந்தைகளுக்கும் அடிப்பட கூடாது என்பதற்காக நிறைய ஒத்திகை பார்த்த பின்னரே சண்டை காட்சியை படமாக்கினார். இந்த படத்தில் நாற்பது நிமிடத்திற்கு சண்டை காட்சி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.’ என்றார்.

நடிகர் சிம்பு பேசுகையில்,

"இந்த படத்தில் நடித்திருக்கும் அனைத்து இளம் நடிகர்களும் முதலில் தங்களுடைய பெற்றோர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் அனுமதியளிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு இருக்கமுடியாது. ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் தான் தங்களது பிள்ளைகள் இப்படியாகவேண்டும், அப்படியாகவேண்டும் என்று ஆசையை வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்த பிள்ளைகள் தாங்கள் இப்படித்தான் வரவேண்டும் என்ற எண்ணுகிறார்கள். அதை பெற்றோர்கள் உணர்வதில்லை. ஆனால் இந்த படத்தில் தன் பிள்ளை ஆசைப்பட்டதை உணர்ந்து அதற்கு உதவியாக இந்த படத்தை இயக்கி தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்கிறேன். சூப்பர் சிங்கர் என்ற ஒரு நிகழ்ச்சி இல்லையென்றால் இன்று குழந்தைகள் யாரும் பாட்டை கற்றிருக்கமாட்டார்கள்.  

எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது? அதை உங்களிடம் தெரிவிக்கிறேன். நம்முடைய குழந்தைகளை எதற்காக பள்ளிகூடத்திற்கு அனுப்புகிறோம்.? படிக்கவும், அங்கு கற்றுக்கொள்ளவும் அனுப்புகிறோம். ஆனால் பள்ளிக்கூடத்தில் என்ன நடக்கிறது தெரியுமா? அனைத்து பிள்ளைகளும் பாடங்களை படித்து கற்றுக்கொண்டார்களா என்பதை கண்காணிப்பதே கிடையாது. எந்த குழந்தை முதலில் விடையளிக்கிறது என்பதை மட்டுமே பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கவனிக்கிறார்கள். குழந்தைக்கு ஒரு விசயம் தெரியவில்லை என்றால் அதனை தெளிவுப்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை. ஆனால் அது போன்று ஒரு பள்ளிக்கூடமும் தற்போது இல்லை.

நீ முதலில் சொல்கிறாயா? அல்லது வேறு யார் முதலில் சொல்வது? என்பதாகவே இருக்கிறது. மாணவர்களிடத்தில் பொறாமை குணத்தை வளர்க்கிறார்கள். அவன் எப்படி நல்லவனாக வளர்வான். அதனால் எனக்கு குழந்தை பிறந்தால், அந்த குழந்தையை நான் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பமாட்டேன். இன்றைய சூழலில் திறமையிருக்கிறவன் தன் திறமையை வெளிக்காட்டவே முடியாது என்ற நிலை தான் இருக்கிறது. அதனால் பெற்றோர்கள் தான் தங்களது குழந்தையின் திறமையை கண்டறிந்து அவனுக்கு ஆதரவு கொடுத்து வளர்த்தெடுக்கவேண்டும்." என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக...

2024-03-19 01:03:23
news-image

'கங்கணம்' கட்டி பழிவாங்கும் மூவரணி

2024-03-18 17:50:19
news-image

சாதனை படைத்த அஜித் குமாரின் 'குட்...

2024-03-18 17:50:43
news-image

கதையின் நாயகியாகும் நித்யா மேனன்

2024-03-18 15:23:40
news-image

வாக்காளர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவுண்டமணியின் 'ஒத்த...

2024-03-18 15:22:57
news-image

'மக்கள் படைப்பாளி' சீனு ராமசாமி வெளியிட்ட...

2024-03-16 15:56:52
news-image

ஜெயம் ரவி வெளியிட்ட நடிகர் தீரஜ்...

2024-03-16 17:50:12
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-16 14:47:30
news-image

அமீகோ கரேஜ் - விமர்சனம்

2024-03-16 14:47:44
news-image

ஆண்களை டார்ச்சர் செய்வதில் சிறந்தவர்கள் காதலியா?...

2024-03-16 14:39:49
news-image

காடுவெட்டி - விமர்சனம்

2024-03-16 14:39:07
news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'எனக்குத் தொழில்...

2024-03-16 14:48:39