ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதால் ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  

நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வளா கங்கை, கிங் கங்கை, களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. 

களுகங்கை , மில்லகந்த நீர் அளவிடும் பகுதியில் பாரிய வௌ்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை , களனி கங்கை , கிங்கங்கை , அத்தனகலு ஓயா பகுதிகளிலும் பாரிய வௌ்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மேற்குறித்த ஆற்றினை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

நில்வளா  கங்கையை சேர்ந்த  மாத்தறை, கடவத்தை சதாரா, திஹகொட, மலிம்பட, கம்புறுப்பிட்டிய, அதுருலிய, அகுரஸ்ஸ, பிடபாத்தர பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறும்  கிங் கங்கையை அண்மித்த, பத்தேகம, போப்பே, போத்தல, வெலிவிட்டிய, திவிதுர, நாகொட, நியகம, தவலம, நெலுவ பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் களு கங்கையை அண்மித்த மக்கள், களுத்துறை, தொடம்கொட, மில்லனிய, மாதுருவல, ஹொரண, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய, கிரில்ல, குருவிட்ட, எலபத்த, இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் களனி கங்கையை அண்மித்த மக்கள் கொழும்பு, களனி, கொலன்னாவ, பியகம, கடுவெல, ஹங்வெல்ல, தொம்பே, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, தெரணியகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, அத்தனகலு ஓயாவை அண்டிய மக்கள், நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவாங்கொட, கம்பஹா, அத்தனகல்ல பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மா ஓயாவை அண்டிய மக்கள் - பன்னல, திவுலப்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நிலவும் அதிக மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மகாவலி கங்கையினை பயன்படுத்தும் தாழ்நில பிரதேச மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், மாத்தறை -அக்குரெஸ்ஸ பிரதேசத்தின் பல கிளை வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அக்குரெஸ்ஸ - கியம்பலாகொட , அக்குரெஸ்ஸ - தந்துவ , அக்குரெஸ்ஸ - கம்புருப்பிடிய போன்ற வீதிகள் சுமார் 5 அடி அளவில் நீரில் மூழ்கியுள்ளன.இதேவேளை, நேற்று முதல் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதிலும் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக, இதுவரையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

புளத்கொஹூபிட்டிய – உந்துகொட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி 4 பேர் உயிரிழந்ததுள்ளனர். அத்துடன் சீரற்ற காலநிலையால் 1000 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மொராகலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, நோர்வுட் நகரை அண்மித்த பகுதியில் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்ததன் காரணமாக 45 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நோர்வுட் அம்மன் கோவில் மற்றும் பள்ளிவாசல் பகுதி குடியிருப்புக்களை சேர்ந்த மக்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேநேரம், நோர்வுட்- மஸ்கெலியா மற்றும் ஹட்டன் பொகவந்தலாவ வீதிகளில் ஆங்காங்கே மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதுடன், கண்டி கம்பளை பிரதான வீதியிலும் மரங்கள், பாறைகள், மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளன. 

அத்துடன், நாவலப்பிட்டி - ஹட்டன் பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்மேடொன்று சரிந்து விழுந்தமையால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.குக்குலேகங்க நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவிசாவளை மற்றும் தெரணியகலை பகுதியில் களனி ஆறு, பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுகின்றது.

இதன் காரணமாக களனி ஆற்று கரையோரங்களிலும் கிளையாறுகள் அருகிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 பிரதான வீதி அலவத்துகொட 8 ஆம் மைல்கல் பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு ஒழுங்கை ஊடாக மாத்திரம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, காலி மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எல்பிட்டிய – அலுத்கம வீதியின் மிரிஸ்வத்த பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

இதேவேளை, களுத்துறை- பாலிந்தநுவர பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதேவேளை, அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பிலான அதிகாரம் பாடசாலை அதிபருக்கும் மாகாண பணிப்பாளருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தில் சில கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்  தெரிவித்துள்ளார்.இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி கல்வி வலயங்களுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலய பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அரச அதிகாரிகளின் உதவி தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லையாயின் 1919 என்ற இலக்கத்தினூடாக உடனடியாக ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த விடயத்தில் நிதி தொடர்பில் பிரச்சனைகளுக்கு இடமளிக்காது அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து நிவாரணங்கள் தொடர்பில் கண்டறிந்து அவற்றுக்கான வசதிகளை வழங்குவதற்கு துரிதமாக செயற்படுமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, திடீர் அனர்த்த நிலை ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.அனைத்து மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான நிதியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.