எவ்.பி.ஐ. அமைப்பு டொனால்ட் டிரம்ப் தேர்தலில் போட்டியிட்டவேளை அவரின் பிரச்சார நடவடிக்கைகளை உளவு பார்த்ததா என்பது குறித்து அமெரிக்காவின் நீதி திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பராக் ஒபாமா நிர்வாகம் இது குறித்த உத்தரவினை எவ்.பி.ஐ.யிற்கு வழங்கியதா என நான் அறிய விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்.பி.ஐ. டிரம்பின் பிரச்சார நடவடிக்கைகளிற்குள் ஊருடுவியமை தெரியவந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமெரிக்காவின் பிரதி சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்குள் பொருத்தமற்ற காரணத்திற்காக யாராவது ஊருடுவினால் நாங்கள் அதனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் டிரம்ப் ஈடுபட்டவேளை அவரது குழுவினர் ரஸ்ய முகவர்களுடன் தொடர்புகொண்டனரா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஸ்யாவுடன் டிரம்ப் குழுவினருக்கு தொடர்பு என்பது குறித்த விசாரணைகளை அரசியல் பழிவாங்கல் என டிரம்ப் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.