நாட்டில் பெய்து வரும் அடை மழையையடுத்து பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது களனி கங்கையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் களனி கங்கையை அண்டிய தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு, களனி, கடுவெல, கொலன்னாவ, ஹங்வெல்ல, தொம்பே, பியகம, தெஹியோவிட்ட , ருவான்வெல்ல ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பான திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில் அங்கு பெய்துவரும் கடும் மழையையடுத்து தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றதெனவும் இதனால் தாழ் நிலப் பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொடர்ச்சியான மழை காரணமாக மில்லகந்த பகுதியில் களு கங்கை, ஜின் கங்கை மற்றும் அத்தனகல ஆறு ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றதால் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

களுகங்கை மில்லகந்த பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் மதுராவல , ஹொரணை , புளத்சிங்கள,இங்கிரிய மற்றும் பாலிந்த நுவர போன்ற பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் , ஜின்கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் பத்தேகம , போபே -போத்தல , நாகொடை , நியாகம , தவலம மற்றும் நெலுவ போன்ற பிரதேச மக்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் , அத்தனகலை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் , நீர்கொழும்பு , ஜா- எல , மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேசங்களை சேர்ந்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் மழை ஓயாது  பெய்துவருவதால் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக  களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல், பதுளை போன்ற மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் கூட்ட கட்டமைப்பு காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

காற்றின் வேகம் உடனடியாக அதிரிக்கக்கூடும் என்பதனால், கடல் பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும். இந்தப் பிரதேச கடல் கொந்தளிப்பாக காணப்படும். 

இதனால் மீன்பிடியில் ஈடுபடுவோர் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறுவளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையின் போது நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக இரத்தினபுரி , எலபாத , கிரியெல்ல , அயகம, களுத்துறை மற்றும் காலி போன்ற பிரதேசங்களில் 17 கடற்படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.