(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களில் 2194 குடும்பங்களைச் சேர்ந்த 8690 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் கடும் மழை காரணமாக ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தால் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மரமொன்று முறிந்து விழுந்ததனூடாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது.

தற்போது பெய்து வரும் அடைமழையின் காரணமாக நாடளாவிய ரீதியில் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதனால் தாழ் நில பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் வெள்ளம் அல்லது வேறு அனர்த்தங்கள் ஏற்படுமாயின் உடனடியாக அன்ர்த்த மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட முப்படை மற்றும் பொலிஸார் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ, பொலிஸ் உயர் மட்டங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.