நுவரெலியா மாவட்டத்தில் உர தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஒரு மாத காலமாக உரம் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் வியாபார கடைகளில் ஒரு கிலோ உரத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ உரம் 30 ரூபாவைக்கு விற்கப்பட்டதாகவும் தற்போது 60  ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கும் இதேவேளை கடந்த காலங்களில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை உரத்தின் விலை 1300 ரூபாவாக விற்கப்பட்டு வந்ததாகவும் தற்போது 2500 ரூபா வரை கடைகளில் விற்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அத்தோடு சில கடைகளில் உரங்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, ஹோல்புருக் ஆகிய பகுதிகளில் உரம் போதியளவு இன்மையால் பாரியளவிலான விவசாயத்தை மேற்கொள்ளும் நபர்கள் மரக்கறி வகைகளுக்கு உரிய நேரத்தில் இட வேண்டிய உர வகைகளை இட முடியாததனால் விளைச்சலை பெற முடியாமல் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்யும் வியாபாரிகள் குறைந்த விலை கொடுத்து வாங்குவதால் இன்னும் பல பிரச்சினைகளை விவசாயிகள் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மலையக பகுதிகளில் அதிகமான குடும்பங்கள் விவசாயத்தை தொழிலாக மேற்கொள்வதோடு இதில் வரும் வருமானத்தையே நம்பி வாழ்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் உரம் தட்டுப்பாடு என்பது இவ்விவசாயிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நுவரெலியா மாவட்டத்தில் விவசாய திணைக்களங்கள் இருக்கின்ற போதிலும் இது போன்ற விடயங்களுக்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு அனைத்து கடைகளிலும் உர வகைகளை உடனடியாக விற்பனை செய்வதற்கு கடை உரிமையாளர்களும் விவசாய திணைக்களமும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(க.கிஷாந்தன்)