(நெவில் அன்தனி)

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பரிந்துரைக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தேர்தல் குழுவை ஏகமனதாக தெரிவு செய்துள்ளது.

இலங்கை கிரிக்கடெ் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழுவினால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த அதே ஐவரை அதி விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பிரசன்னமான அங்கத்தவர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இதனை ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கிரிக்கெட் நிறுவன கேட்போர்கூடத்தில் இன்று பகல் நடைபெற்றது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகிகளுக்கான தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்களைப் பொறுப்பேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட தேர்தல் குழு ஏற்புடையதல்லவென சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய விளயைாட்டுத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொதுக் கூட்டத்திலேயே தேர்தல் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவேண்டும் எனவும் மே 19ஆம்  திகதி அதி விசேட பொதுக் கூட்டத்தை நடத்தி தேர்தல் குழுவை நியமித்து வருடாந்தப் பொதுக் கூட்டத்தையும் நிருவாகிகளுக்கான தேர்தலையும் மே 31ஆம் நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்திருந்ததற்கமைய இன்றைய தினம் அதி விசேட பொதுக் கூட்டத்தை நடத்தியதாக திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தின்போது தேர்தல் குழுவை நியமிப்பதற்கான சட்ட விதிகளைத் திருத்தி அமைத்து அதற்கான அங்கீகாரம் இலங்கை கிரிக்கெட் நிறுவன பொதுச் சபையில் பெறப்பட்டு  அதன் பின்னர் தேர்தல் குழுவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் குழுவில் ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்த ஐவரான ரசிக வீரதுங்க, சரத் உத்பொல, புத்திக இலங்கதிலக்க, எச்.டி. ஜூட் பெரேரா, தேவகிரி பண்டார ஆகியோரை பொதுச் சபையில் ஏகமனதாக தெரிவு செய்ததுடன் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய தேர்தலை மே 31ஆம் திகதிவரை ஒத்திவைத்ததாக திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தலில் யாரெல்லாம் போட்டியிடுகின்றார்கள் என அவரிடம் கேட்டபோது, அதனை இன்னும் ஓரிரு தினங்களில் தேர்தல் குழுவினர்தான் அறிவிப்பர் என பதிலளித்த அவர் எதிர்வரும் தேர்தலில் தமது குழுவினர் போட்டியின்றி தெரிவாவது உறுதி எனவும் குறிப்பிட்டார். 

சகல பதவிகளுக்கும் தமது குழுவினர்  வேட்பு மனுதாக்கல் செய்துள்ளதாகவும் செயலாளர் பதவிக்கு மாத்திரம் மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரை இன்னும் சில தினங்களில் தீர்மானிப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று காலை நடைபெற்ற அதிவிசேட பொதுக் கூட்டத்தின் பின்னரே ஊடகவியலாளர்களுடனான சந்திப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால நடத்தினார்.