"விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது நாட்டை சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக போரிட்டு வெற்றி வாகை  சூடினோம் . இதற்காக செய்த உயிர் தியாகங்கள்  இன்று காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டை பாதுகாக்க மீண்டும் ஒன்றிணைய வேண்டும்." என போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியூள்ள நிலையில் விஷேட அறிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

 மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

" உலகில் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பிடமிருந்து எமது நாட்டை மீட்டெடுத்து இன்றுடன் 9 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இவ்வாறானதொரு வெற்றியை ஒரு நாடு பெற்றுக் கொள்ளுமாயின் அது மிகவும் முக்கியமானதொன்றாகும். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக நான் பதவி ஏற்ற போது அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போர் நிறுத்த ஒப்ந்தத்தை முன்னெடுத்திருந்தது. மறுபுறம் எமது உள்நாட்டு பிரச்சினைக்காக சர்வதேச தலையீடுகளும் மேலோங்கி இருந்தன. எமது கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதியையும் நிலப்பரப்பில் மூன்றில் ஒன்றுமாக பயங்ரவாதிகள் ஆக்கிரமித்திருந்தனர். 

உலகில் மிகவும் ஆபத்தான கடல் மற்றும் விமான பிரிவுகளை உள்ளடக்கிய பயங்கரவாத அமைப்பாகவே விடுதலைப்புலிகள் காணப்பட்டனர். அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக உலகில் வேறு எந்தவொரு நாட்டுக்கும் இல்லாத தைரியத்துடன் போரிட்டோம். இந்த போராட்டத்தில் நாட்டு மக்கள் ஓர் அணியில் திரண்டு போருக்கு வழு சேர்த்தனர். இப் போரில் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் என பல்லாயிரம் பேர் உயிர்தியாகம் செய்யதனர். இன்னும் பலர் அங்கவீனமாக்கப்பட்டனர். 

விடுதலைப்புலிகள் அமைப்பு முழுமையாக அழிக்கப்பட்டதன் பின்னரே வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஜனநாயகம் கிடைத்தது. அந்த நிலப்பரப்புக்களில் பயங்கரவாதிகளினால் புதைக்கப்பட்ட மிதி வெடிகளை அகற்றிய பின்னரே அந்த மக்களுக்கு சொந்த மண்ணில் கால் பதிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. மேலும் நெடுஞ்சாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் என அனைத்து இடங்களிலும் மரண ஓழங்களின்றி சமாதான சூழல் தென்னிலங்கையைப் போன்று வடக்கு கிழக்கிற்கும் அதன் பின்னரே கிடைக்கப்பபெற்றது. 

நாட்டு மக்களின் சுதந்திரம் வாழும் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக உயிர் தியாகம் செய்த அனைவரும் உயர்ந்த மானிடர்களாவர். அவ்வாறு அன்று இறுதி கட்ட போரில் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இராணுவத்தினர் போர் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டுகின்றனர். இதைவிட மோசமான செயல் யாதெனில் மக்களின் வாக்குகளால் அரசாங்கமும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளமை மிகவும் மோசமான காட்டிக் கொடுப்பாகும். 

நாட்டுக்கு எதிராக துரோகம் செய்பவர்களும் இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பவர்களும் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வடக்கில் எவ்விவதமான அச்சமும் இன்றி தமிழ் மக்களுக்கு வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்தது எமது இராணுவமே. அதே போன்று தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு சமாதானம் கிடைத்ததும் எமது இராணுவத்தாலேயே. விடுதலைப்புலிகள் அன்று பலவந்தமாக பிள்ளைகளை இழுத்துச் சென்றனர் . 

அந்த அவலம்  வடக்கு தாய்மார்க்கு இன்று இல்லை. ஆகவே இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் காட்டிக்கொடுப்புக்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். அதே போன்று நாட்டின் ஒழுமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க மீண்டும் நாம் ஒன்றிணைய வேண்டும்." என குறிப்பிடப்பட்டுள்ளது.