கிராமிய குளங்களை புனரமைக்கும் செயற்திட்டத்தை துரிதமாக முன்னெடுக்குமாறு உரிய துறையினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

நாம் இன்று எதிர்கொள்ள நேர்ந்துள்ள காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் குளங்களை புனரமைக்கும் நடைமுறையை பலப்படுத்த வேண்டும் என, மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று  முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.  

மகாவலி குடியிருப்பாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த காணிப் பிரச்சினைக்கு தீர்வாக ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்திய ஜனாதிபதி குறித்த செயற்திட்டத்தை துரிதமாக நிறைவுசெய்யுமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 

குறித்த அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்துகொண்டார். 

கனிய எண்ணெய் பிரித்தெடுப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்திய ஜனாதிபதி மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மகாவலி அதிகாரசபை மற்றும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் ஆகியவற்றிற்கு இது தொடர்பில் சம பொறுப்பு உள்ளதென ஆலோசனை வழங்கினார்.

குறித்த செயற்பாடுகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குகையில் உரிய நிறுவனங்கள் மூன்றினதும் அதிகாரிகளின் பங்களிப்புடன் செயற்படுமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி உரிய நிபந்தனைகளுக்கமைய செயற்படுவதாக வாக்குறுதியளித்த பின்னர் அனுமதிப் பத்திரங்களை வழங்கவும் குறித்த பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மாதம் ஒரு முறையாவது கலந்துரையாடலில் ஈடுபட்டு உருவாகும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். 

தற்போது சுற்றாடல் அதிகாரிகளுக்கான 89 வெற்றிடங்கள் நிலவுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதற்கமைய அவ்வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதன் மூலம் குறித்த வெற்றிடங்களை துரிதமாக பூரணப்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். 

மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் சரத் சந்ரசிறி வித்தான உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.