ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகளில் இலங்கை படையினர் இடம்பெறவேண்டும் என்றால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை பின்பற்றவேண்டும் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப்பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ள பர்ஹான் ஹக்  லெபனானில் பணியாற்றும் ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள 49 இலங்கை படையினர் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இது குறித்து ஆராய்ந்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ள,  ஐ.நா. பேச்சாளர் அமைதிப்படையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள ஏனைய 101 படையினரின் கடந்த காலங்கள் குறித்தும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினர் படையினரின் கடந்த காலங்கள் குறித்து விசாரணை செய்யும்போது ஐ.நா.வின் கொள்கையை பின்பற்றுகின்றனர் என்பதை உறுதி செய்வதற்காக இலங்கையுடன் ஐ.நா. இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை படையினரிற்கு அமைதிப்படையில் எதிர்காலத்தில் இடமளிக்கப்படவேண்டும் என்றால் இலங்கை ஐ.நா.வின் விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.