பண மோசடி வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் என 5 இடங்களில் அந் நாட்டு பொலிஸார் சோதனை நடாத்தி வருகின்றனர்.

மலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில் தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டொலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் நஜீப் ரசாக் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நஜீப் ரசாக்கின் வீடு அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த தகவலை மறுத்துள்ள நஜீப்பின் வழக்கறிஞர் ஹர்பால் சிங்,

"ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை, கைப்பை போன்ற சில பொருட்கள் காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஆனால் அதுகுறித்து அச்சப்பட எதுவுமில்லை" என தெரிவித்துள்ளார்.

நஜீப் ரசாக் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹர்பால் சிங் "அதற்கான அவசியம் இல்லை, நஜீப்பும் அவரது குடும்பத்தினரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்" என கூறியுள்ளார்