ஜனாதிபதியின் பங்கேற்புடன் தேசிய ரணவிரு நிகழ்வுகள்  பத்தரமுல்லையிலுள்ள பாராளுமன்ற விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெறவுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தாய் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த, காணாமல்போன, சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த, முடக்கப்பட்ட படையினர் மற்றும் பொலிஸாரை நினைவு கூறும் தேசிய “ரணவிரு” நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை மாலை கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள பாராளுமன்ற விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ளதாக தேசிய ரணவிரு சேவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பு அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள பாராளுமன்ற விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெறும் “நினைவு கூறுதல்” நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படை அதிகாரிகள், ரணவிரு சேவா அதிகார சபை அதிகாரிகள், மற்றும் ரணவிரு சேவா பயனாளிக் குடும்பங்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

நாடாளாவிய ரீதியிலிருந்து பங்கு பற்றும் சுமார் 3000இற்கு மேற்பட்ட ரணவிரு சேவாவைச் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் குடும்பங்களுடன் மட்டக்களப்பு மாவட்டைச் சேர்ந்த 50இற்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களக் குடும்பங்களும் இந் நிகழ்வில் இணைந்து கொள்வதாக தெரிவித்தார்.

நாட்டின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் மனிதாபிமான செயற்பாட்டின் போது தமது உயிர்களை தாய் நாட்டிற்காக அர்ப்பணித்த மற்றும் தமது உடல் அவயவங்களை தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் ரணவிரு சேவா அதிகார சபையினால் ரணவிரு ஞாபகார்த்த நிகழ்வுகள் வருடாவருடம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.